அபுதாபியில் இந்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண உலகளாவிய தகுதிகாண் சுற்றுப் போட்டியை முன்னிட்டு 15 வீராங்னைகளைக் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு பெயரிட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிவரும் இலங்கை குழாத்தில் இடம்பெறும் வீராங்கனைகளுடன் 15 வயதுடைய சஷினி கிம்ஹானி அறிமுக வீராங்கனையாக குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையிலும் காலியிலும் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கட் மும்முனை தொடர்களில் திறமையாக பந்துவீசியதால் சஷனி கிம்ஹானிக்கு சிரேஷ்ட அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான மகளிர் ரி20 கிரிக்கெட் தொடரில் வெற்றியீட்டி வரலாறு படைத்த சூட்டோடு இலங்கை மகளிர் அணி, தகுதிகாண் சுற்றை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.
சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை குழாத்தில் அனுபவம் வாய்ந்த இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, ஹர்ஷிதா சமரவிக்ரம. ஹாசினி பெரேரா, நிலக்ஷி டி சில்வா, உதேஷிகா ப்ரபோதனி உட்பட 15 வீராங்கனைகள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அபுதாபியில் இந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ண உலகளாவிய தகுதிகாண் சுற்றில் அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து, இலங்கை, தாய்லாந்து, உகண்டா, ஐக்கிய அரபு இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, வனாட்டு, ஸிம்பாப்வே ஆகிய 10 நாடுகள் பங்குபற்றுகின்றன.
இந்த அணிகள் இரண்டு குழுக்களில் மோதவுள்ளதுடன் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். அரை இறுதிகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும் இரண்டு அணிகளும் மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் பிரதான சுற்றில் பங்குபற்ற தகுதிபெறும்.
தகுதிகாண் சுற்று ஏப்ரல் 25 முதல் மே 7ஆம் திகதிவரை நடைபெறும்.
ஏ குழுவில் இலங்கை, தாய்லாந்து, ஸ்கொட்லாந்து, உகண்டா, ஐககிய அமெரிக்கா ஆகியனவும் பி குழுவில் அயர்லாந்து, ஸிம்பாப்வே, நெதர்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம், வனாட்டு ஆகியனவும் இடம்பெறுகின்றன.
இலங்கை தனது முதலாவது போட்டியில் தாய்லாந்தை ஏப்ரல் 25ஆம் திகதி எதிர்த்தாடும்.
தொடர்ந்து ஸ்கொட்லாந்து (ஏப்ரல் 27), உகண்டா (மே 1), ஐக்கிய அமெரிக்கா (மே 3) ஆகிய அணிகளை இலங்கை எதிர்த்தாடும்.
அரை இறுதிப் போட்டிகள் மே 5ஆம் திகதியும் இறுதிப் போட்டி மே 7ஆம் திகதியும் நடைபெறும்.
அபுதாபி ஸய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கிலும் டொலரன்ஸ் ஓவல் விளையாட்டரங்கிலும் நடைபெறும்.
தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன நேரடியாக மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றன.
போட்டியை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடென்ற வகையில் பங்களாதேஷும் பிரதான போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளது.
ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் செப்டெம்பர் – அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாம்
சமரி அத்தபத்து (தலைவர்), விஷ்மி குணரத்ன, நிலக்ஷி டி சில்வா, ஹர்ஷிதா சமரவிக்ரம, கவிஷா டில்ஹாரி, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, உதேஷிகா ப்ரபோதனி, இனோகா ரணவீர, அச்சினி குலசூரிய, ஹன்சிமா கருணாரட்ன, காவிய காவிந்தி, இனோஷி பெர்னாண்டோ, சுகந்திகா குமாரி, சஷினி கிம்ஹானி.