சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய கூட்டமொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(9) நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(9) கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் ஸ்தாபகத்தலைவர் பஷில் ராஜபக்ச உள்ளிட்டவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
அரசியல் பீடக் கூட்டம்
இந்தக் கூட்டம் வழமையாக கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காகவே கூட்டப்படவுள்ளது
எனினும், கட்சியின் கடந்த கூட்டத்தில் அதிபர் தேர்தல் சம்பந்தமாக கட்சியின் அங்கத்தவர்கள் கருத்து வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
அந்தக் கட்டுப்பாடுகளை மீறி தொடர்ச்சியாக சில உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.ஷ
கட்சியின் செயற்பாடுகள்
அத்துடன், கட்சியின் உறுப்பினர்கள் வேறு கட்சிகளுடன் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பிலும் தீர்மானங்கள் எடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளது.
அதேபோன்று, அதிபர் ரணிலுக்கும், பஷில் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பிலும் இணக்கப்பாடுகள் எட்டப்படாமையை அடுத்து அது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும், தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டதன் பின்னர் கட்சியின் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் ஆராயப்படவுள்ளது” என அவர் தெரிவித்தார்.