‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் கதையின் நாயகனாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜரகண்டி’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்தப் பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி நட்சத்திர இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ். ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார்.
அரசியலை குறிப்பாக தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் நாயகனான ராம் சரணின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பிரத்யேக நடனத்தில் உருவான ‘ஜரகண்டி’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னணி பாடகர்கள் தலர் மெஹந்தி மற்றும் பூஜா வெங்கட் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளலிசையில் அமைந்திருக்கும் இந்தப் பாடல் இளம் தலைமுறை ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இயக்குநர் ஷங்கரின் வழக்கமான பிரம்மாண்டமான காட்சி அமைப்பு- நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள்- வண்ணமயமான பின்னணி- கிராபிக்ஸ் தொழில்நுட்பம்- ராம்சரண் + கியாரா அத்வானி துடிப்பான நடனம்.. என ரசிகர்களை கவரும் அம்சங்கள் இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளதால்… இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ விரைவில் இணையத்தில் நூறு மில்லியன் பார்வையாளர்களை எட்டும் என திரையுலகினர் உறுதியாகக் கூறுகிறார்கள்.