இந்திய மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார்.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி எந்தவொரு கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்து களம் காண்கிறது.
2024 மக்களை தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 20 பெண்கள் மற்றும் 20 ஆண்கள் அடங்கிய 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுவதாக அறிவித்தார். அறிவித்தபோது கூட்டத்தில் கைதட்டல்கள் மற்றும் விசில் சத்தங்கள் பறந்தன. ”ஐயா வனம் காக்க போராடினார்; இனம் காக்க நானும் என் மகளும் போராடுகிறோம்” என சீமான் தெரிவித்தார்
அப்போது பேசிய சீமான் ”தனித்து நிற்கிறோம்! தனித்துவத்தோடு நிற்கிறோம்! மற்றவர்தோள் மீது ஏறி நின்று நான் உயரமானவன் என்று காட்டுவதை விட தனித்து நின்று உண்மையான உயரத்தைக் காட்டுவதே மேலானது.
காலையில் வாக்குப் பதிவு என்றால் இரவு சொன்னால் கூட சின்னத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் ஆற்றல் இதிறமை கொண்ட தகவல் தொழில்நுட்பப் படை பிரிவை கொண்டுள்ளேன்.என சீமான் தெரிவித்தார்.