படம் : மதிமாறன்.
அமேசான் ப்ரைமில் பார்த்தேன்.
சினிமா கதாநாயகனுக்கு என்று இருக்கும் எல்லா விதிகளையும் மீறிய ஒரு கதாநாயகன் வெங்கட் செங்குட்டுவன்.. அவர் பெயர் நெடுமாறன். அவர் உயரம் நாலடிக்கும் உள்ளேயே. அத்தகைய ஒரு உயரம் குறைந்த மனிதரை கதாநாயகனாய் வைத்து கதையை யோசித்ததற்கே இயக்குநர் மந்திரா வீர பாண்டியனுக்கு ஒரு சிறப்பு ஷொட்டு.
கதை திருநெல்வேலியில் நடக்கிறது. எங்க ஊரு என்ற பெருமிதம் வேறு. பிடித்த வசனம். ” ரெண்டு கண்ல ஒரு கண் மாறு கண்ணுனா அதைத் தூக்கித் தனியாவா வைக்கிறோம் நம்ம முகத்தில தான வச்சுக்கிறோம்” தந்தை MS பாஸ்கரிடம் அவருடைய இரட்டை பிள்ளைகளில் ஒரு பையன் சராசரிக்கும் குறைவான உயரத்தில் வளருவதால் அவனை முடிந்தால் தனியே வைத்திருங்கள் என்று
சொன்ன டாக்டருக்கு தந்தையின் பதில் தான் நான் மேலே சொன்னது. அருமைல்ல!!!
இவானா பாந்தமான அக்கா பாத்திரத்தில். இந்த பொண்ணு லவ் டுடேயிலயே நம்மைக் கவர்ந்தவள். இப்போ அழுத்தமாக அமர்ந்து கொண்டாள் ரசிகர்கள் மனதில்.
பிடித்த அடுத்த வசனம். “உயிர் தான் முக்கியம் உயரம் முக்கியமில்ல” அந்த கதாநாயகனுக்கு காதலும் உண்டு. அதுவும் கல்லூரியில் பலரும் காதலிக்க போட்டி போடும் பெண், இவரை இவரது புத்திசாலித்தனத்துக்கும் ஆண்மைக்குமாக காதலிக்கிறாள். உன்னைப் போல ஒரு ஆண் பிள்ளையை இப்பத் தான் பார்க்கிறேன் என்று சொல்கிறாள். ஆண்மை என்பது எல்லோரும் சாதாரணமாக வைத்திருக்கும் அளவுகோலுக்குள் அடங்காது எனச் சொல்ல விரும்புகிறார் இயக்குநர்.
காவல் துறை அதிகாரியாக வந்து உயரத்தை விட உள்ளத்தை விரும்பும் நாயகியாக நடிக்கும் ஆராத்யா தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். காவல் உடை அவருக்கு மிகவும் பாந்தமாக இருக்கிறது.
கதாநாயகன் தான் உயரம் குறைந்து பிறந்ததை எண்ணி கலங்கித் தவிக்கும் இடமும் ஒன்றுண்டு. அது உண்மையிலேயே எல்லோரையும் கண் கலங்க வைக்கும்.
அபார்ட்மென்ட்டின் செக்யூரிட்டி ரோலில் பவா செல்லத்துரை நடித்திருக்கிறார். அவரை வைத்தும் ஒருவரை உயரத்தை வைத்தோ நிறத்தை வைத்தோ அளவீடு செய்வது தவறு என சொல்ல வைத்திருக்கிறார்கள்.
தவற விடக் கூடாத படம்.