பாகிஸ்தானுக்கு நியூஸிலாந்து ரி20 கிரிக்கெட் அணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விஜயம் செய்யவுள்ளது.
இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிசெய்துள்ளது.
பாகிஸ்தானை ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி சென்றடையவுள்ள நியூஸிலாந்து, ராவல்பிண்டியில் ஏப்ரல் 18ஆம் திகதிக்கும் 21ஆம் திகதிக்கும் இடையில் நடைபெறவுள்ள முதல் மூன்று சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும்.
தொடர்ந்து லாகூர், கடாபி விளையாட்டரங்கில் ஏப்ரல் 25, 27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கடைசி இரண்டு போட்டிகளில் பாகிஸ்தானை நியூஸிலாந்து எதிர்த்தாடும்.
நியூஸிலாந்து பாதுகாப்பு குழுவினர் கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து பாதுகாப்பு நிலைவரங்களை ஆராய்தனர்.
இதனை அடுத்தே நியூஸிலாந்து அணியினர் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தமது நாட்டு விளையாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா பொன்ற நாடுகள் பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைவரங்களை ஆராய்வது இயல்பான விடயமாகும்.
2022க்குப் பின்னர் நியூஸிலாந்து அணியினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வது இது மூன்றாவது தடவையாகும்.
பாகிஸ்தானுடன் 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு நியூஸிலாந்து அணியினர் 2022 பிற்பகுதியில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து 2023 ஏப்ரல் மாதம் 5 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் 5 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் நியூஸிலாந்து அங்கு விளையாடியிருந்தது.