ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஐந்து பிராந்திய அணிகளுக்கு இடையிலான தேசிய சுப்பர் லீக் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தம்புள்ளை அணி சம்பியனாகி வெற்றிக் கிண்ணத்தை தக்கவைத்துக்கொண்டது.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் வார இறுதியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கண்டி அணியை 19 ஓட்டங்களால் தம்புள்ளை அணி வெற்றிகொண்டு சம்பியனானது.
இரண்டு அணிகளினதும் துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசித்த இப் போட்டியில் கணிசமான மொத்த எண்ணிக்கைககள் பெறப்பட்டது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தம்புள்ளை அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 332 ஓட்டங்களைக் குவித்தது.
தம்புள்ளை அணியின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் திறமையை வெளிப்படுத்தியதுடன் பவன் ரத்நாயக்க ஆட்டம் இழக்காமல் அபார சதம் ஒன்றைக் குவித்தார்.
அணித் தலைவர் மினோத் பானுக்க, லசித் குரூஸ்புள்ளே ஆகிய இருவரும் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
தொடர்ந்து 3ஆவது விக்கெட்டில் சனோஜ் தர்ஷிக்க, பவன் ரத்நாயக்க ஆகிய இருவரும் 160 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
அயன சிறிவர்தனவுடன் 4ஆவது விக்கெட்டில் மேலும் 53 ஓட்டங்களை பவன் ரத்நாயக்க பகிர்ந்தார்.
பவன் ரத்நாயக்க ஆட்டம் இழக்காமல் 118 ஓட்டங்களையும் சனோஜ் தர்ஷிக்க 73 ஓட்டங்களையும் மினோத் பானுக்க 69 ஓட்டங்களையும் லசித் குரூஸ்புள்ளே 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் புலின தரங்க 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 45.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 313 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
லஹிரு உதார, காமில் மிஷார ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 149 ஓட்டங்களைப் பகிர்ந்து கண்டி அணிக்கு நம்பிக்கை ஊட்டினர்.
ஆனால், அவர்களது இணைப்பாட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட பின்னர் சிறந்த இணைப்பாட்டங்கள் இடம்பெறாததுடன் துடுப்பாட்ட வீரர்களும் பிரகாசிக்கவில்லை.
லஹிரு உதார 86 ஓட்டங்களையும் காமில் மிஷார 94 ஓட்டங்களையும் 8ஆம் இலக்க வீரர் 44 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அயன சிறிவர்தன 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் துஷதன் ஹேமன்த 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
விசேட விருதுகள்
இறுதி ஆட்டநாயகன்: பவன் ரத்நாயக்க (தம்புள்ளை)
சுற்றுப் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்: லஹிரு குமார (கண்டி – 4 போட்டிகளில் 9 விக்கெட்கள்)
சுற்றுப் போட்டியில் சிறந்த துடுப்பாட்டவீரர்: ஷெஹான் பெர்னாண்டோ (காலி – 4 போட்டிகளில் 249 ஓட்டங்கள்)
சுற்றுப் போட்டி நாயகன்: ஜனித் லியனகே (யாழ்ப்பாணம் – 225 ஓட்டங்கள், 2 விக்கெட்கள்)
போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவரும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான சமன்த தொடன்வெல, தேசிய கிரிக்கட் செயற்பாடுகள் தலைமை அதிகாரி சின்தக்க எதிரிமான்ன ஆகியோர் பரிசில்களை வழங்கினர்.