கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற றோயல் – பரி. தோமா கல்லூரிகளுக்கு இடையிலான 145ஆவது நீலவர்ணங்களின் கிரிக்கெட் சமர் சுவாரஸ்யம் எதையும் ஏற்படுத்தாமல் சனிக்கிழமை (09) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
இந்தப் போட்டி வேற்றி தோல்வியின்றி முடிவடைந்த போதிலும் இரண்டு கல்லூரிகளினதும் காருண்ய நிதி வெற்றிபெற்றது என்று கூறுவது பொருத்தமாகும்.
இந்தப் போட்டியில் பெறப்பட்ட 804 ஓட்டங்களுக்கு தலா 1000 ரூபா வீதமும் வீழ்த்தப்பட்ட 23 விக்கெட்களுக்கு தலா 10,000 ரூபா வீதமும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தினால் மொத்தம் 10 இலட்சத்து 34,000 ரூபா உதவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த நிதிக்கான மாதிரி காசோலையை பரி. தோமா கல்லூரி முதல்வர் மார்க் பிலிமொரியா, றோயல் கல்லூரி அதிபர் திலக் வத்துஹேவா ஆகியோரிடம் டயலொக் ஆசிஆட்டா குழுமத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சுப்புன் வீரசிங்க கையளித்தார்.
துடுப்பாட்ட வீரர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியில் முதல் நாளன்று பரி. தோமா அணியும் இரண்டாம் நாளன்று றோயல் அணியும் முழுநாளும் துடுப்பெடுத்தாடியிருந்தன.
கடைசி நாளான சனிக்கிழமை (09) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 7 விக்கெட் இழப்புக்கு 234 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த றோயல், 9 விக்கெட்களை இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.
மூன்றாம் நாள் காலை தங்களது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த நெத்வின் தர்மரட்ன 42 ஓட்டங்களுடனும் புலான் வீரதுங்க 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
பந்துவீச்சில் அஷேன் பேரேரா 74 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் டேரியன் மரியோ டியகோ 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
போட்டியில் ஒரு முடிவை எட்டும் நோக்கத்துடன் றோயல் அணி தனது முதல் இன்னிங்ஸை டிக்ளயார்ட் செய்த போதிலும் அதனால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
முதல் இரண்டு நாட்களில் போன்றே துடுப்பாட்டத்துக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் பரி. தோமா அணி திறமையாகத் துடுப்பெடுத்தாடி 4 விக்கெட்களை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருது றோயல் அணித் தலைவர் சினேத் ஜயவர்தனவுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த துடுப்பாட்ட வீரர்: சதேவ் சொய்ஸா (பரி. தோமா)
சிறந்த பந்துவிச்சாளர்: அஷேன் பெரேரா (பரி. தோமா)
எண்ணிக்கை சுருக்கம்
பரி. தோமா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 297 (சதேவ் சொய்ஸா 83, தினேத் குணவர்தன 50, நேதன் கல்தேரா 44, மஹித் பெரேரா 36, ரமிரு பெரேரா 55 – 4 விக்., சினேத் ஜயவர்தன 68 – 4 விக்.)
றோயல் 1ஆவது இன்: 278 – 9 விக். டிக்ளயார்ட் (சினேத் ஜயவர்தன 92, நெத்வின் தர்மரட்ன 42, ஓவென் அம்பன்பொல 36, டினுர சேனாரத்ன 33, அஷேன் பெரேரா 74 – 5 விக்., டேரியன் மரியோ டியகோ 40 – 2 விக்.)
பரி. தோமா 2ஆவது இன்: ஆட்டநேர முடிவில் 229 – 4 விக். (தினேத் குணவர்தன 74, மஹித் பெரேரா 63, சதேவ் சொய்ஸா 33, திஷேன் எஹலியகொட 31 ஆ.இ., நேதன் கல்தேரா 20 ஆ.இ., ரமிரு பெரேரா 87 – 2 விக்.)