வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் ‘அரகலய’ போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும், மாறாக சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் மக்கள் பேரவையின் செயற்பாட்டாளரான ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்த மக்கள் போராட்டத்தின் விளைவாக நாட்டை விட்டு வெளியேறி, பதவி விலகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி’ எனும் நூல் கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்டது.
அந்நூலில் ‘அரகலய’ போராட்டத்தின் பின்னணி, போராட்டக்காரர்களின் எழுச்சியை அடுத்து தான் நாட்டை விட்டு வெளியேறிய விதம், அவ்விவகாரத்தில் நிலவிய வெளிநாட்டுத் தலையீடுகள் போன்ற பல்வேறு விடயங்களையும் கோட்டாபய ராஜபக்ஷ அவரது பார்வையின் அடிப்படையில் உள்ளடக்கியிருக்கின்றார்.
குறிப்பாக, ‘அரகலய போராட்டத்துக்கு வருகை தந்தவர்கள் யார் என நன்கு ஆராய்ந்தால், அவர்கள் அனைவரும் ஏற்கனவே என்னை எதிர்த்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.
அப்போராட்டத்தில் சிறுபான்மையினரின் வகிபாகம் பெருமளவுக்கு இருந்தது. ஏனெனில், போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் தமிழர்களும், பொதுபலசேனாவின் எழுச்சிக்குப் பின்னர் முஸ்லிம்களும் என்னை விரோதியாகவே பார்த்தார்கள். எனவே நான் பதவியில் தொடர்ந்தால் சிங்கள பௌத்தர்கள் மேலும் பலப்படுத்தப்படுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக இப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அவர்கள் தூண்டப்பட்டிருக்கக்கூடும்’ என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து ‘அரகலய’ போராட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொடர்ந்து பங்கேற்றுவந்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்திடம் வினவியபோது, ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவதற்கும், தமது இயலாமைகளை நியாயப்படுத்திக்கொள்வதற்கும் மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகவே தாம் இதனைப் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் ‘அரகலய’ போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும், மாறாக, சிங்களவர்களே அப்போராட்டத்தின் முக்கிய பங்காளிகளாக செயற்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இவ்விடயம் தொடர்பில் தேவையேற்படும் பட்சத்தில் தாம் விரிவான தெளிவுபடுத்தல்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.