கொழும்பு எஸ்.எஸ்.சி. விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (07) ஆரம்பமான டி.எஸ். சேனாநாயக்க ஞாகார்த்த கேடயத்துக்கான றோயல் – தோமியன் 145ஆவது நீலவர்ணங்களின் கிரிக்கெட் சமரில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பரி. தோமா அணி சகல விக்கெட்களையும் இழந்து 297 ஓட்டங்களைக் குவித்தது.
முதலாம் நாள் ஆட்டத்தில் ஒரு ஓவர் மீதம் இருக்கையில் பரி. தோமாவின் கடைசி விக்கெட் சரிந்ததால் அத்துடன் முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் பரி. தோமா அணியின் துடுப்பாட்டம் மிகச் சிறப்பாக இருந்தது.
முதலாம் நாள் ஆட்டத்தின் மதிய போசன இடைவேளையின்போது பரி. தோமா அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று நல்ல நிலையில் இருந்தது.
சதேவ் சொய்ஸா, சேனாதி புலேன்குலம ஆகிய இருவரும் 66 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
புலேன்குலம 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் சதேவ் சொய்ஸா, தினேத் குணவர்தன ஆகிய இருவரும் இரண்டாவது விக்கெட்டில் மேலும் 66 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அதுவரை பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சதேவ் சொய்ஸா பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து 83 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதன் பின்னர் ஆட்டம் தேநீர் இடைவேளைக்கு நிறுத்தப்பட்டபோது பரி. தோமா அணி 2 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், தேநீர் இடைவேளைக்குப் பின்னர் 124 ஓட்டங்கள் மாத்திரம் மொத்த எண்ணிக்கைக்கு மேலதிமாக சேர மீதமிருந்த 8 விக்கெட்களும் சரிந்தன.
இதனிடையே தினேத் குணவர்தனவும் அணித் தலைவர் மஹித் பெரேராவும் 3ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
குணவர்தன 50 ஓட்டங்களையும் மஹித் பெரேரா 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
மத்திய வரிசையில் நேதன் கல்தேரா (44), ஆகாஷ் பெர்னாண்டோ (29) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
றோயல் பந்துவீச்சில் ரமிரு பெரேரா 55 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அணித் தலைவர் சினேத் ஜயவர்தன 68 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந் நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதலாவது பகுதி இரண்டு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமையவுள்ளது.
றோயல் அணியினர் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதலாவது பகுதியில் விக்கெட் எதனையும் இழக்காமல் ஓட்டங்களைப் பெற முயற்சிப்பார்கள்.
அதேவேளை, அப் பகுதியில் றோயல் அணியினரின் விக்கெட்களை சரிப்பதற்கு பரி. தோமா அணியினர் முயற்சிப்பார்கள். எனவே இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதலாவது பகுதி பரபரப்பை தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.