இலங்கை இந்தியாவை ஒரு மூத்தசகோதரனாக கருதுவதாக தெரிவித்துள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரகபாலசூர்ய 2048ம் ஆண்டுக்குள் நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன் உள்ள இலங்கை இந்தியாவின் முன்மாதிரியை அறிந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்தியாவுடன் இணைந்து செயற்படவிரும்புகின்றது என ஏன்ஐக்கு தெரிவித்துள்ள அவர் இந்திய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் நாங்கள் உதவிகளை எதிர்பார்க்கவில்லை இணைந்த செயற்பாடுகளையே எதிர்பார்க்கின்றோம் நாங்கள் இந்தியாவை ஒரு சகாவாக பார்க்கின்றோம் நாங்கள் இந்தியாவை ஒரு மூத்தசகோதரனாக பார்க்கின்றோம் அதன் வெற்றிகதையை பார்க்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒரு அபிவிருத்தியடைந்த நாடு என்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் இந்தியா அதனை எவ்வாறு சாதித்தது என்பதை அறிந்துகொள்ள விரும்புகின்றோம் எனவும் தாரகபாலசூர்ய தெரிவித்துள்ளார்.
நாங்கள.2048 ம் ஆண்டுக்குள் அபிவிருத்தியடைந்த நாடாகமாற விரும்புகின்றோம் என தெரிவித்துள்ள அவர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அதிகளவான பொருளாதார வாய்ப்புகள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை சீனாவின் செல்வாக்கிற்கு உட்படுகின்றதா என்ற கேள்விக்கு நாங்கள் எந்த நாட்டுடனும் வர்த்தகத்தில் ஈடுபடதயார் ,ஆனால் இந்தியாவை பொறுத்தவரை நாங்கள் விசேட உறவுகளை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்
இந்தியாவுடன் எங்களுக்குள்ளது நாகரீக தொடர்பு ஆகவே இந்தியா சீனாவுடனான எங்களின் உறவுகள் குறித்து அதிகம் கவலைப்படவேண்டியதில்லை எனவும் தாரகபாலசூரிய தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் மாத்திரமல்ல நாங்கள் மேற்குலகத்துடனும் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள அவர் உதாரணத்திற்கு நாங்கள் ரஸ்யாவுடன் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம் மத்திய கிழக்குடன் நாங்கள் சிறந்த உறவுகளை கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு சிறிய நாடு எங்களிற்கு பாரிய அரசியல் அபிலாசைகள் இல்லை நாங்கள் எந்த நாட்டின்மீதும் படையெடுக்கப்போவதில்லை இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுவதையும் இலங்கை மக்களினது வாழ்க்கை தரம் உயர்வதையும் உறுதி செய்ய விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியின் பின்னர் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தாரகபாலசூர்ய நீங்கள் ஒன்றரை வருடத்திற்கு முன்னர் அரகலய தருணத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவித்தீர்கள் நீங்கள் மிகப்பெரும் வரிசையில் மக்களை பார்த்திருப்பீர்கள் – நாலுகிலோமீற்றர்தூரத்திற்கு எரிபொருள் மருந்து உணவிற்காக மக்கள் வரிசையில் காத்து நின்றனர் இந்த நிலையை நாங்கள் வேகமாக மாற்றிவிட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக எங்கள் நண்பர்களின் உதவியுடன் இதனை மாற்றினோம் குறிப்பாக பிரதமர் மோடியின் அயல்நாட்டிற்கு முதலிடம் என்ற கொள்கை காரணமாக எனவும் குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் அந்த நெருக்கடியான தருணத்தில் உதவியமைக்காக இந்திய மக்களிற்கும் பிரதமர் மோடிக்கும் மிகவும் நன்றி உடையவர்களாக உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.