கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கால்பந்தாட்ட விளையாட்டுத்துறைக்கு இந்த வருடம் முழுவதும் பிக்ஸ்டன் எல்ஈடி பிறைவேட் லிமிட்டட் பூரண அனுசரணை வழங்க முன்வந்துள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட விளையாட்டில் முன்னணி பாடசாலையாகவும் ‘கால்பந்தாட்ட மன்னர்கள்’ என அழைக்கப்படுவதுமான ஸாஹிரா கல்லூரி, இந்த வருடம் விளையாடவுள்ள கால்பந்தாட்டப் போட்டிகளின்போது பிக்ஸ்டன் ஜேர்ஸிகளை அணிந்து விளையாடவுள்ளன.
இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் மற்றும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியன ஏற்பாடு செய்யும் சகல போட்டிகளிலும் விளையாடும் ஸாஹிரா அணியினரை பிக்ஸ்டன் லைட்டிங் பிரகாசிக்கச் செய்யவுள்ளது.
ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கான தாராள அனுசரணை உதவுத் தொகையை பிக்ஸ்டன் எல்ஈடி பிறைவேட் லிமிட்டெட் சார்பாக அதன் அதிபர் அப்துல் ரஹ்மான் ஸுபைரிடம் இருந்து கல்லூரி அதிபர் ட்ரிஸ்வி மரிக்கார் பெற்றுக்கொண்டார். அத்துடன் கல்லூரி அணிகளுக்கான ஜேர்சி செட்களையும் அப்துல் ரஹ்மான் ஸுபைர் வழங்கிவைத்தார்.
தமது அனுசரணை ஸாஹிரா கால்பந்தாட்டத்துடன் மட்டுமல்லாமல் சமூகங்களிடையே நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை கட்டியெழுப்பும் நோக்கத்தையும் கொண்டது என பிக்ஸ்டன் எல்ஈடி பிறைவேட் லிமிட்டட் அதிபர் அப்துல் ரஹ்மான் ஸுபைர் குறிப்பிட்டார்.
‘இத்தகைய அனுசரணை ஒன்றை எமது நிறுவனம் வழங்குவது இதுவே முதல் தடவையாகும். இந்த அனுசரணை ஸாஹிரா கால்பந்தாட்டத்தை ஊக்குவித்து மேம்படுத்தும் என நம்புகிறோம். இலங்கையில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கால்பந்தாட்டம் பிரபல்யம் பெற்ற விளையாட்டாகும். இந்த விளையாட்டுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் நாங்கள் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்.
‘கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் அதேவேளை இன்னும் ஒரு முக்கிய நோக்கத்திற்காகவே இந்த அனுசரணையை வழங்க முன்வந்துள்ளோம். இன்னோரென்ன பிரச்சினைகள் காராணமாக இலங்கை மக்கள் உட்பட உலக மக்கள் நலிவடைந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் மிகவும் அவசியமாகும். எனவே மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த கால்பந்தாட்ட விளையாட்டை ஒரு கருவியாக பயன்படுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
‘ஸாஹிராவுக்கு முதல் தடவையாக வழங்கும் இந்த அனுசரணை கனி தரும் என நம்புகிறோம். அந்த நம்பிக்கை எமது அனுசரணையைத் தொடர்வதற்கு நிச்சயமாக உதவும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.
கல்லூரி அதிபர் ட்ரிஸ்வி மரிக்கார், இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டத்தின் ‘தந்தை’ என வர்ணிக்கப்படும் எம்.இஸட். பாறூக், முன்னாள் தேசிய வீரரும் சம்பியன் வீரருமான நெய்னா மொஹமத், கால்பந்தாட்ட வளர்ச்சிக்காக அயராது உழைப்பவரும் சம்பியன் அணிகளை உருவாக்கியவருமான பி.எஸ்.ஏ. ரபீக், பயிற்றுநர்களான முன்னாள் தேசிய விரர்கள் ஆகியோர் ஸாஹிரா கால்பந்தாட்ட விளையாட்டில் முக்கிய பங்காற்றி வருவதால் இன்னும் பல வருடங்களுக்கு தனது அனுசரணையை தொடர பிக்ஸ்டன் நிறுவனம் முன்வரும் என்பது நிச்சயம்.
கால்பந்தாட்டத்தில் ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட ஸாஹிரா கல்லூரியில் 5 வயது பிரிவுகளில் கால்பந்தாட்ட அணிகள் இருப்பதுடன் கால்பந்தாட்டப் பயிற்சியகம் ஒன்றும் இயங்கிவருகிறது.
இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம், கல்வி அமைச்சு, விளையாட்டுத்துறை அமைச்சு ஆகியவற்றினால் நடத்தப்படும் எல்லா வகையான கால்பந்தாட்டப் போட்டிகளிலும் ஸாஹிரா சம்பியனாகியிருப்பது பாராட்டுக்குரியதாகும்.
அத்துடன் ஸாஹிராவிலிருந்தே அதிகளவிலான வீரர்கள் தேசிய அணிகளில் இடம்பெற்றனர், இடம்பெற்றுவருகின்றனர்.
கல்லூரியின் கபூர் மண்டபத்தில் நடைபெற்ற இந்த அனுசரணை வழங்கும் வைபவத்தில் கல்லூரியின் கால்பந்தாட்ட வீரர்களும் பயிற்றுநர்களும் கலந்துகொண்டனர்.