அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தான் தனிப்பட்ட தொடர்புகளை கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சரத் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் நான் வேறு விதமான தொடர்புகளை கொண்டுள்ளேன்.
என்னை அரசியலில் அறிமுகப்படுத்தியது ரணில் விக்ரமசிங்க இதற்கமைய அவருடனான எனது உறவு அமைந்துள்ளது.
எதிர்கால அரசியல் பயணம்
எனினும், அவருடன் நான் இதுவரை அரசியல் தொடர்பில் எந்தவொரு பேச்சுக்களையும் முன்னெடுக்கவில்லை. எனது எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
வேறு சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து கொள்ளுமாறு எனக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எனினும், நான் யாருடனும் இணைந்து பயணிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை.
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்வது தொடர்பில் எனக்கு எந்த திட்டமும் இல்லை. அவர்களது அரசியல் கொள்கைகள் வேறுபட்டவை. எனது கொள்கைகள் வேறுபட்டவை. என தெரிவித்துள்ளார்