எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் அறிவித்துள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (4) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்க பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பில் வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில்,
வடக்கு மாகாண சபையின் இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் – 2024 தொடர்பாக, கடந்த ஐந்து வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின் இடமாற்றமானது கடந்த வருடம் பிரதிப்பிரதம செயலாளரினால் (நிர்வாகம்) விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.இருந்த போதிலும் ஆளுநரின் கோரிக்கைக்கு இணங்க இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டி 04.01.2024 தொடக்கம் 10.01.2024 வரையான ஏழு நாட்களும் 17.01.2024 தொடக்கம் 30.01.2024 வரையான 14 நாட்களும் கால அவகாசம் வழங்கி எமது இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துமாறு பிரதிப் பிரதம செயலாளரினை கடிதம் மூலம் கேட்டிருந்தோம். குறித்த காலப்பகுதிக்குள் இடமாற்றம் நடைமுறைக்கு வராதவிடத்து 05.02.2024 தொடக்கம் 10.02.2024 வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்தோம்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் , அரச சேவையில் 05 வருடங்களுக்கு ஒருமுறை அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் வழங்குவதன் ஊடாக நாட்டில் இலஞ்சம் ஊழல் அற்ற வினைத்திறனான நிர்வாகத்தினை கட்டமைக்க முடியுமென்று உறுதிபடக் கூறியுள்ள போதிலும் சில பொறுப்பற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக இடமாற்றம் நிறுத்தப்படுவது கவலையளிக்கின்றது.
எனவே எமது இடமாற்ற உரிமையினையும் தாபன விதிக்கோவையினையும் நடைமுறைபடுத்த வலியுறுத்தியே இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் குறித்த போராட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணியளவில் ஆளுநர் செயலகத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக சென்று மகஜர் கையளிப்பதுடன் தொடர்ந்து பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மகஜர் கையளிப்பு இடம்பெறும்.
அத்தோடு 10.02.2024 வரை தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும் என்பதனை அறியத்தருவதோடு அனைவரினதும் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம். – என்றுள்ளது.