இலங்கைக்கு எதிராக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள ஒற்றை டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் சுழல்பந்துவீச்சாளர் ராஷித் கான் இடம்பெறவில்லை.
16 வீரர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் நூர் அல் ஸத்ரான், ஸியா உர் ரெஹ்மான், மொஹமத் இஷாக், நவீத் ஸத்ரான் ஆகிய நால்வர் முதல் தடவையாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவர்களில் வேகப்பந்துவீச்சாளர் நவீத் ஸ்த்ரான், விக்கெட் காப்பாளர் மொஹமத் இஷாக் ஆகிய இருவரும் முதல் தடவையாக சிரேஷ்ட ஆப்கானிஸ்தான் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் வெளிப்படுத்திய ஆற்றல்களின் அடிப்படையிலேயே டெஸ்ட் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக அணித் தேர்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, முதுகுப் புறத்தில் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் ராஷித் கான் பூரண குணமடையாததால் குழாத்தில் சேர்க்கப்படவில்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடவிருப்பது குறித்து உற்சாகம் அடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மிர்வாய்ஸ் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
‘டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்கு தசாப்தங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட இலங்கையுடன் முதல் தடவையாக எமது அணி டெஸ்ட் போட்டியில் விளையாடப்போவது மகிழ்ச்சி தருகிறது. இந்த வருடம் எமது அணி பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் போன்று டெஸ்ட் போட்டியிலும் பலம் வாய்ந்த அணியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தான் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் அயர்லாந்து (2019), பங்களாதேஸ் (2019), ஸிம்பாப்வே (2021) ஆகிய அணிகளை வெற்றிகொண்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் டெஸ்ட் குழாம்
ஹஷ்மத்துல்லா ஷஹிதி (தலைவர்), ரஹ்மத் ஷா (உதவித் தலைவர்), இக்ரம் அலிக்ஹய்ல், மொஹமத் இஷாக், இப்ராஹிம் ஸத்ரான், நூர் அலி ஸத்ரான், அப்துல் மாலிக், பாஹீர் ஷா, நசிர் ஜமால், காய்ஸ் அஹ்மத், ஸஹிர் கான், ஸியா உர் ரெஹ்மான் அக்பர், யாமின் அஹ்மத்ஸாய், நிஜாத் மசூத், மொஹமத் சலீம், நவீத் ஸத்ரான்.