தேயிலை தோட்டப் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு உயிராபத்துள்ளதாகவும் மலையக தோட்டப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சிறுத்தைகள் தேயிலைச் செடிகளுக்குள் பதுங்கியிருந்து அவ்வழியே செல்வோரை தாக்கிய பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறும் அதேவேளை, அண்மையில் தேயிலைச் செடிக்குள் இறந்து கிடந்த நாயின் உடலை உண்டுகொண்டிருந்த சிறுத்தையொன்று, அப்பகுதியில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை தாக்கியதாகவும் கூறுகின்றனர்.
இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறுகையில்,
“பொகவந்தலாவையிலுள்ள தோட்டமொன்றில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் பணியிடத்துக்கு சென்றுகொண்டிருந்தபோது சிறுத்தையால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளானார்.
சிறுத்தைகளின் தாக்குதலிலிருந்து பொது மக்களை பாதுகாக்கவும், சிறுத்தைகளிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள மக்கள் பொறி வைத்து சிறுத்தைகளை கொல்வதை தடுக்கவும் வனவிலங்கு அதிகாரிகள் சிறந்த பொறிமுறையை உருவாக்க வேண்டும்” என்கின்றனர்.
மேலும், ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவின் வைத்திய நிபுணர் ஒருவர், “தேயிலைச்செடிகளுக்கு மத்தியில் சிறுத்தைகள் நடமாடுவதை தொழிலாளர்கள் கண்டால், உரத்த குரலில் சத்தமிட்டு சிறுத்தைகளை பயமுறுத்தி துரத்த முயற்சிக்கலாம். ஆனால், அந்த சிறுத்தைகளை தாக்க முற்பட்டால், அவை மனிதர்களை தாக்கும்” என கூறுகிறார்.