பரந்துபட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸ் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கும் யோசனையொன்றைஇஸ்ரேல் முன்வைத்துள்ளது.
இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகள் இதனை சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளன.
காசாவில் யுத்தம் நான்கு மாதங்களாக நீடிக்கின்ற போதிலும் ஹமாஸ் அமைப்பினை முற்றாக அழிக்க முடியாத நிலையில் இஸ்ரேல் உள்ள சூழ்நிலையிலேயே இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் இதுவரை ஹமாசின் முக்கிய தலைவர்கள் எவரையும் கைதுசெய்யவில்லை,ஹமாசின் போரிடும் திறன் மிக்க 70 வீதமான உறுப்பினர்கள் இன்னமும் உயிருடன் உள்ளனர் என இஸ்ரேல் மதிப்பிட்டுள்ளது.
இவ்வாறான பி;ன்னணியிலேயே ஒக்டோபர் தாக்குதலின் சூத்திரதாரிகள் என கருதப்படும் ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதற்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது.
காசாவிலிருந்து ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் வெளியேறினால் ஹமாஸ் அமைப்பின் காசா மீதான பிடியை அது பாதிக்கும் மேலும் வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் தொடர்ந்தும் இலக்குவைக்கமுடியும் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு வெளியே பல மத்தியகிழக்கு நாடுகளில் ஹமாஸ்தலைவர்கள் வசிக்கின்றனர்.
இதேவேளை இஸ்ரேலின் இந்த யோசனையை ஹமாஸ் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என சிஎன்என் தெரிவித்துள்ளது.