நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகைக்கும் ஊடகவியலாளர்கள் சிலருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சுமார் 400,000 அமெரிக்க டொலர்களை வழக்குச் செலவுத் தொகையாக வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் சொத்து விபரங்கள், வரி ஏய்ப்பு முயற்சிகள் தொடர்பாக, 2018 ஆம் ஆண்டு நியூயோர்க் ரைம்ஸில் வெளியிடப்பட்ட புலனாய்வுக் கட்டுரைக்கு புலிட்ஸர் விருது வழங்கப்பட்டிருந்தது.
அக்கட்டுரைக்காக தனது வரி விபரங்கள் அடங்கிய ஆவணங்களை சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்டதாக மேற்படி பத்திரிகை மீதும், 3 ஊடவியலாளர்கள் மீதும் குற்றம் சுமத்திய டொனால்ட் ட்ரம்ப் 100 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி 2021 ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தார்.
ட்ரம்பின் உறவினராக மேரி ட்ரம்ப்பும், டொனால்ட் ட்ரம்பினால் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவர்.
இவ்வழக்கை நியூயோர்க் மாநில உயர் நீதிமன்றம் கடந்த மே மாதம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், மேற்படி வழக்குக்கான செலவுத் தொகையாக நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் மூவருக்கு 392, 638 அமெரிக்க டொலர்களை (சுமார் 12.5 கோடி இலங்கை ரூபா) டொனால்ட் ட்ரம்ப் வழங்க வேண்டும் என நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது.