நாட்டின் வரிக்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவுசெய்வதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன விளக்கமளித்துள்ளார்.
இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (4) கொழும்பிலுள்ள அலரி மாளிகையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட கன்னி விக்னராஜா, நாட்டிலுள்ள பின்தங்கிய சமூகப்பிரிவினரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதை முன்னிறுத்தி கடந்த 30 – 40 வருடகாலமாக பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கொள்கை அடிப்படையிலான நடவடிக்கைகளைப் பெரிதும் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.