நாம் இக்கட்டான சூழ்நிலையிருந்து விடுபட்டுள்ளோம். நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் சவால் ஒன்றே தற்போது எமக்குள்ளது.
நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துச்செல்லும் வேலைத்திட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்றைய தினம் (01) சிறப்பு மத வழிபாடுகள் இடம்பெற்றதுடன் உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே பிரமதர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தில் நாமும் ஒரு பங்குதாரராக வேண்டும். நாம் கடுமையான சூழ்நிலைகளை கடந்துவிட்டோம். நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் சவால் ஒன்றே தற்போது எமக்குள்ளது.
அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு தீர்மானங்கள் எடுத்ததாக கூறப்பட்ட போதிலும் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களை நாம் வீட்டுக்கு அனுப்பவில்லை. ஓய்வு பெற்றுள்ள, ஓய்வு பெறவுள்ளவர்களின் ஓய்வூதியங்களும் பறிக்கப்படவில்லை.
கொவிட் தொற்று மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது அதிலிருந்து மீள்வதற்கு எமது நட்பு நாடுகள் உதவின.
அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில், பிரதமர் என்ற வகையில் நான், அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் சவால்களை வெற்றி கொள்வதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு, பல விடயங்களில் மக்கள் எம் மீது கொண்ட நம்பிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம்.
இந்த பின்னணியில் நம் நாட்டின் விவசாயிகள் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையக்கூடிய நாட்டை உருவாக்க முடிந்துள்ளது.
மற்றைய துறைகளிலும் எமக்கு இருந்த நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து விடுபட வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அபிவிருத்தியடைந்த ஒரு வளமான நாட்டை கட்டியெழுப்ப வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவதுடன் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
நாம் கடந்த வருடத்தை போல் அல்லாமல் மிகுந்த தைரியத்துடன் நம்பிக்கையுடனும் பொறுப்புகளை நிறைவேற்று கூடிய ஒரு புதிய ஆண்டில் நுழைந்துள்ளோம். மனித வாழ்வில் பல விடயங்கள் மறந்து போகலாம்.
இருப்பினும் கஷ்டங்கள் மற்றும் கடுமையான சூழ்நிலைகளை கடந்து எமது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
முழு சமூகமும் எதிர்பார்க்கும் வளமான எதிர்காலத்தை அடைவதற்கான பாதையை மீண்டும் வலுப்படுத்துவதற்காக நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லவேண்டும். அதற்காக அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தாய் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப ஒன்றாக கைக்கோர்க்க வேண்டும் என்றார்.