தரமற்ற மருந்துக் கொள்வனவு தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் போரத்தின் தலைவர் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லன வியாழக்கிழமை (28) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்துக்கு வெளியில் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளர் சமன் ரத்நாயக்க மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரி சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜித் குணசேகர ஆகியோர் இந்த தரமற்ற மருந்து கொள்வனவின் மூளையாக செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தினார்.
இதுவரை, இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர், மற்றும் அதே பிரிவைச் சேர்ந்த மேலும் சில அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இவர்கள் அனைவரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.