பாகிஸ்தானுக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (26) ஆரம்பமான ‘பொக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பலமான நிலையை நோக்கி அவுஸ்திரேலியா நகர்ந்துகொண்டிருக்கிறது.
டேவிட் வோர்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் ஆகிய மூவரும் ஆட்டம் இழந்த போதிலும் 2ஆவது டெஸ்டின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா 187 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
டேவிட் வோர்னர் (38), உஸ்மான் கவாஜா (42) ஆகிய இருவரும் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
அவர்கள் இருவரும் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
பிற்பகல் 2.25 மணியளவில் அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்ததால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் கழித்து ஆட்டம் மீண்டும் தொடர்ந்தபோது ஸ்டீவன் ஸ்மித் 26 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஆட்டநேர முடிவில் மானுஸ் லபுஷேன் 44 ஓட்டங்களுடனும் உலகக் கிண்ண இறுதி ஆட்ட நாயகன் ட்ரவிஸ் ஹெட் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
மழை காரணமாக முதலாம் நாள் ஆட்டத்தில் 66 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டது.
பந்துவீச்சில் அகா சல்மான் 5 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஹசன் அலி 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஆமிர் ஜமால் 47 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பேர்த் விளையாட்டரங்கில்ந நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் 360 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.