அவுஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் மேலும் 4 விக்கெட்கள் மீதம் இருக்க அவுஸ்திரேலியாவைவிட 124 ஓட்டங்களால் பாகிஸ்தான் பின்னிலையில் இருக்கிறது.
போட்டியின் இரண்டாம் நாள் காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா, சகல விக்கெட்களையும் இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றது.
மானுஸ் லபுஷேன், ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்த நிலையில் ஹெட் 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (204 – 4 விக்.)
மொத்த எண்ணிக்கை 250 ஓட்டங்களாக இருந்தபோது மானுஸ் லபுஷேன் 63 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. அவுஸ்திரேலியாவின் கடைசி 6 விக்கெட்கள் 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.
மிச்செல் மார்ஷ் 41 ஓட்டங்களைப் பெற்றார்.
பாகிஸ்தான் பந்துவீச்சில் ஆமிர் ஜமால் 64 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிர் ஹம்ஸா 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹசன் அலி 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்ரிடி 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பாகிஸ்தானின் ஆரம்பம் எதிர்பார்த்தளவு சிறப்பாக அமையவில்லை.
மொத்த எண்ணிக்கை 34 ஓட்டங்களாக இருந்தபோது இமாம் உல் ஹக் 10 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
எனினும் அப்துல்லா ஷபிக் (62), அணித் தலைவர் ஷான் மசூத் (54) ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைக் குவித்ததுடன் 2ஆவது விக்கெட்டில் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.
ஆனால், அவர்கள் இருவர் உட்பட 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் சரிய பாகிஸ்தான் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளது.
மத்திய வரிசையில் முன்னாள் அணித் தலைவர் பாபர் அஸாம் (01), சௌத் ஷக்கீல் (09), அகா சல்மான் (05) ஆகிய மூவரும் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் களம் விட்டகன்றனர்.
அதன் பின்னர் 7 ஓவர்கள் தாக்குப்பிடித்த மொஹமத் ரிஸ்வான் 29 ஓட்டங்களுட னும் ஆமிர் ஜமால் 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் லயன் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.