மும்பை வான்கடே விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நிறைவுக்கு வந்த ஒற்றை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 8 விக்கெட்களால் இந்தியா வெற்றிகொண்டு வரலாறு படைத்தது
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 46 வருட மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலியாவை இந்தியா வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.
ஸ்ம்ரித்தி மந்தனா, ஜெமிமா ரொட்றிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராக்கர் ஆகியோர் 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த சாதனைமிகு இணைப்பாட்டம், பூஜா வஸ்த்ராக்கர், ஸ்நேஹ் ரானா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இந்தியாவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
அவுஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 219 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது அதன் முதல் இன்னிங்ஸில் 406 ஓட்டங்களைக் குவித்தது.
இந்தியாவின் 7ஆவது விக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 274 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ராக்கர் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் சாதனை மிகு 122 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியைப் பலப்படுத்தினர்.
இங்கிலாந்துக்கு எதிராக வெதர்பி மைதானத்தில் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அப்போதைய அணித் தலைவர் ஷுபங்கி குல்கர்னி, மினோட்டி தேசாய் ஆகியோர் பகிர்ந்த 106 ஓட்டங்களே இந்தியாவின் 8ஆவது விக்கெட்டுக்கான முன்னைய சாதனை இணைப்பாட்டமாக இருந்தது.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் 197 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 261 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதனை அடுத்து 75 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து உரிய வெற்றி இலக்கை அடைந்தது.