‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். முதல் படமே அதகளப்படுத்தியிருந்ததால், ரசிகர்களின் பார்வை இவர் பக்கம் திரும்பியது. இதையடுத்து, தீரன் அதிகாரம் ஒன்று படத்தையும் இயக்கியிருந்தார்.
அதன்பின், தல அஜித்தின் படங்களான நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என்று அடுத்தடுத்து அஜித்தின் படங்களை இயக்கியிருந்தார்.
அஜித் படங்களுக்குப் பிறகு, உலக நாயகன் கமலஹாசன் நடிக்கும் 233வது படத்தை இயக்குவதற்கு எச்.வினோத் ஒப்பந்தமாகியிருந்தார். இராணுவப் பின்னணியிலான இந்தப் படத்துக்கான கதையை கமல்ஹாசனிடம் கூறி, அவரது சம்மதத்தையும் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், கே.எச்.233 (அதாவது, கமலின் 233வது படம்) படம் கைவிடப்படலாம் என்றும் தள்ளிப்போகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றியையடுத்து, இயக்குனர் ஷங்கரின் ‘இந்தியன் 2’, மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ மற்றும் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்ற உச்ச நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகும்‘கல்கி 2898 – ஏடி’ ஆகிய படங்களில் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.
இதேநேரம், ‘இந்தியன் 2’ படத்துடன், ‘இந்தியன் 3’ படத்தையும் முடித்துவிடத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. எனவே, இந்தியன் தொடர்களுக்கு அடுத்து கேஎச் 233 படத்தை கமல்ஹாசன் தெரிவுசெய்தால், ஏற்கனவே திட்டமிட்டபடி அந்தப் படத்தை எச்.வினோத் இயக்குவார் என்று தெரிகிறது.
ஒருவேளை, இந்தியன் தொடருக்கு அடுத்து தக் லைஃப் படத்தை கமல்ஹாசன் கையிலெடுப்பார் என்றால், கார்த்தியுடன் இணைந்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் அடுத்த பாகத்தை எச்.வினோத் இயக்குவார் என்றும் தெரிகிறது.