துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் புதன்கிழமை (13) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் பி குழு போட்டியில் பங்களாதேஷிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை சுற்றுப் போட்டியிலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறியது.
அஷிக்குர் ரஹ்மான் ஷிபி குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம் பங்களாதேஷுக்கு இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.
இந்த சுற்றுப் போட்டியில் மிக மோசமாக விளையாடிய இலங்கை, அறிமுக அணி ஜப்பானை மாத்திரம் வெற்றிகொண்டு ஏமாற்றத்துடன் நாடு திரும்பவுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியிலும் இலங்கை தோல்வி அடைந்திருந்தது.
பங்களாதேஷுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
புலிந்து பெரேரா (28), விஷ்வா லஹிரு (26), அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (25), ருசந்த கமகே (24), ரவிஷான் டி சில்வா (21), ஷாருஜன் சண்முகநாதன் (21), தினுர கலுபஹன (20) ஆகிய 7 வீரர்கள் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அவர்களால் அணியை பலமான நிலைக்கு இட்டுச் செல்ல முடியாமல் போனது.
பந்துவீச்சில் வசி சித்திக் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மாறூவ் இம்ரிதா 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையம் மஹ்புஸுர் ரஹ்மான் ரபி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 40.5 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டி அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீரர் அஷிக்குர் ரஹ்மான் ஷிபி 11 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் ஆட்டம் இழக்காமல் 116 ஓட்டங்களைக் குவித்தார்.
அவரைவிட சௌதுர் ரிஸ்வான் 32 ஓட்டங்களையும் அஹ்ரார் அமின் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.
சௌதுர் ரிஸ்வானுடன் 2ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களையும் அரிபுல் இஸ்லாமுடன் 3ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களையும் அஹ்ரார் அமினுடன் 4ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களையும் அஷிக்குர் ரஹ்மான் ஷிபி பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுவாக்கினார்.
பந்துவீச்சில் கருக்க சன்கேத் 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
அரை இறுதியில் ஐக்கிய அரபு இராச்சியம்
ஜப்பானுக்கு எதிராக நடைபெற்ற பி குழுவுக்கான மற்றொரு 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 107 ஓட்டங்களால் வெற்றியீட்டிய ஐக்கிய அரபு இராச்சியம் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஐக்கிய அரபு இராச்சியம் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 320 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஜப்பான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ஏ குழுவிலிருந்து பாகிஸ்தான், இந்தியா
இந்த சுற்றுப் போட்டியில் ஏ குழுவிலிருந்து பாகிஸ்தானும் நடப்பு சம்பியன் இந்தியாவும் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
பாகிஸ்தான் தனது 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றது.
அரை இறுதிப் போட்டிகள் 15ஆம் திகதி நடைபெறவுள்ளன.
ஒரு அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு இராச்சிய அணிகளும் மற்றைய அரை இறுதிப் போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகளும் மோதவுள்ளன.
அப் போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் 17ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.