புலம்பெயர் தமிழர்கள் என்ற அடையாளத்திலிருந்து விடுபட்டு ‘புலம்பெயர் இலங்கையர்கள்’ என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்துங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச உலகத் தமிழர் பேரவையினரிடத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது, புலம்பெயர் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்தவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கான முதல் படியே இமயமலை பிரகடனம் என்றும் உலகத் தமிழர் பேரவையினர் பதிலளித்துள்ளனர்.
உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியின் பங்காளிகளுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (12) எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.
இதில், பேராசிரியர்.ஜீ.எல்.பீரிஸ், லக்ஷ்மன் கிரியெல்ல, ரஞ்சித் மத்தும பண்டார, ஏரான் விக்கிரமரட்ன, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், திகாம்பரம், உதயகுமார், வேலுகுமார், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தௌபிக் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, உலகத் தமிழர் பேரவையினால் இமயமலை பிரகடனம் கையளிக்கப்பட்டதோடு, அதனை செயற்பாட்டு ரீதியில் வெற்றி பெறச் செய்வதற்கான ஆழமான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன.
மதிய போசன விருந்துபசாரத்துடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடல் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவிக்கையில்,
சஜித் பிரேமதாசவுடன் நடைபெற்ற சந்திப்பானது மிகவும் முக்கியமானதாக அமைந்தது. அவரது தலைமையிலான எதிரணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் முக்கிய உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிலையில், அவருடனான உரையாடலின்போது, இமயமலை பிரகடனத்தை நான்கு பீடாதிபதிகளுக்கும் கையளித்து அவர்களிடமிருந்து ஆதரவினையும், ஆசீர்வாதத்தினையும் பெற்றுக்கொண்டமையானது முக்கியமானதொரு விடயம் என்று சுட்டிக்காட்டினார்.
அத்தோடு குறித்த பிரகடனத்தின் உள்ளடகத்தில் காணப்படும் விடயங்களில் மூன்றில் இரண்டு பகுதியானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொள்வதில் எந்தவிதமான தடைகளும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
அதேநேரம், ஒருசில விடயங்கள் சம்பந்தமாக இன்னமும் ஆழமான கலந்துரையாடல்கள் அவசியமாக இருப்பதாக கூறியதோடு, அதற்கான முன்னெடுப்புக்களில் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணியினர் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என்றும் கூறினார்.
இதேநேரம், அவரைப் பொறுத்தவரையில், அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதி செய்து அனைத்தின பிரஜைகளும் சமமானவர்கள் என்பதை நிலைநிறுத்துவதே இலக்காக உள்ளதாக குறிப்பிட்டார்.
அந்த வகையில், புலம்பெயர் தமிழர் அமைப்பு என்பது புலம்பெயர் இலங்கையர் அமைப்பு என்ற அடையாளத்தினையே பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்று எம்மிடம் எதிர்பார்ப்பதாகவும், அதனை ஒரு முக்கிய கோரிக்கையாக முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.
அச்சமயத்தில், புலம்பெயர் இலங்கையர் என்றோ அல்லது உள்நாட்டில் இலங்கையர்கள் என்ற அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்கோ நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு, அந்த அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு நீண்ட பயணம் அவசியமாக உள்ளது. அந்தப் பயணத்தின் முதல் கட்டமாகவே இமயமலை பிரகடனம் காணப்படுகிறது என்ற விடயத்தினை சுட்டிக் காண்பித்தோம் என்றார்.
இதனையடுத்து, குறித்த குழுவினர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை அவரது கொழும்பு வாசஸ்தலத்தில் சந்தித்ததோடு அமரபுர நிக்காயவைச் சேந்த வல்பொல விமலஞான தேரர், மாகல்லே நாகித மகா தேரர் பேராசிரியர் கந்தேகொட விமலதம்மே மகா தேரர், வாஸ்கடுவ மஹிந்த வம்ச மகா தேரர், பள்ளிகந்தே இரத்தினசார மகா தேரர், நிந்தனே சந்தவிமல மகா தேரர் ஆகியோரையும் சந்தித்தனர்.
இதில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனான சந்திப்பின்போது, போர் உக்கிரமடைந்த காலத்தில் தான் போரை நிறுத்துவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திப்பதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அதேபோன்ற மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஊடாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும், இருப்பினும் அந்த முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போனதாக கர்தினால் குறிப்பிட்டதாக அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்தார்.
அதேநேரம், கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தீர்மானங்கள், செயற்பாடுகளை ஏன் எடுத்திருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியபோது, அவ்வாறான அணுகுமுறையின் ஊடாக இனங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வினை எட்ட முடியும் என்று கருதியதாக பதிலளித்ததாகவும் குறிப்பிட்டார்.
தற்போது எம்மால் கையளிக்கப்பட்ட இமயமலை பிரகடனத்தினை அமுலாக்குவதற்கு பொருத்தமான சூழல்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்காக தான் ஆயர் பேரவையின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் மூன்றாவது கரமொன்று உள்ள நிலையில் அந்தச் சம்பவம் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் அனைத்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நீதி கிடைப்பதற்கு தான் முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து அமரபுர நிக்காயவின் தேரர்களை கொட்டாஞ்சேனை திபதுதேமராமய தாய் விகாரையில் சந்தித்த உலகத் தமிழர் பேரவை தலைமையிலான குழுவினர், அங்கு பிரித் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
இதன்போது, நாட்டில் பிரிவினைவாத சிந்தனையை தோற்றுவித்து குழப்பங்களையும் பதற்றங்களையும் தோற்றுவிப்பது இலகுவானது. ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழ்வதற்காக தீர்மானித்து முன்வருவது கடினமானதொரு பணியாகும். அந்தக் கடினமான பணியை உலகத் தமிழர் பேரவை முன்னெடுத்துள்ளமையை வரவேற்பதோடு, அந்த சிந்தனை மாற்றத்தின் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை நன்மைகளை அளிக்கும் முகமாக பயன்படுத்த வேண்டும் என்று தேரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்ற சுரேன் சுரேந்திரன் மேலும் தெரிவித்தார்.