இலங்கையின் இரண்டாவது இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் முத்துராஜவெலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி 2026இல் நிறைவடையும். இதன் மூலம் 350 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும். இதன் கட்டுமானச் செலவு 750 மில்லியன் ரூபா ஆகும்.
இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான முத்துராஜவெல பிரதேசத்தில் 10 ஏக்கர் காணி இந்த மின் நிலையத்தை அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காணியை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றது.
இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் சார்பில் அதன் தலைவர் ரியர் அட்மிரல் ஹிரான் பாலசூரிய மற்றும் இலங்கை மின்சார சபையின் சார்பில் அதன் தலைவர் நளிந்த இளங்ககோன் ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான காணியை அரச மற்றும் தனியார் அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு பணிப்புரை விடுத்திருந்தார். இந்த காணியை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதன் மூலம் 720 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
இந்த மின் உற்பத்தி நிலையத் திட்டத்துக்கு நிலக் கீழ் குழாய்த் தொகுதிகள் (டீசல் மற்றும் குளிர்விக்கும் நீர்) அமைப்பதற்காக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் முத்துராஜவெலயில் உள்ள 2½ ஏக்கர் காணியை இலங்கை மின்சார சபைக்கு 30 வருட குத்தகைக்கு கொடுப்பதற்குரிய ஒப்பந்தம் இங்கு தலைவர்களால் கையொப்பமிடப்பட்டது.
இலங்கையின் முதலாவது இயற்கை எரிவாயு மின் நிலையமும் இந்த இடத்தைச் சூழ நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன் நிர்மாணப் பணிகள் 2021இல் ஆரம்பமானது. இது 3 ஆண்டுகளில் நிறைவு செய்யப்படும். இந்த மின் எரிவாயு நிலையம் 350 மெகாவோட் மின் திறன் கொண்டது. இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களும் நிறுவி முடிக்கப்படும்போது, நாட்டின் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படும் மின்சாரத் திறன் 700 மெகாவோட்டாக இருக்கும்.
இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் ஸ்ரீமதி சேனாதீர, மேலதிக பொது முகாமையாளர் சி.பி. அமரசிங்க, பிரதி பொது முகாமையாளர் (காணி மற்றும் சந்தைப்படுத்தல்) ஹேமந்த கமலசிறி, இலங்கை மின்சார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் லோரன்ஸ் ஜயதிலக, பணிப்பாளர் சபை உறுப்பினர் பி. விஜயரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.