புத்தளம் கருவலகஸ்வெவ தேவனுவர பகுதியில் மின்சார வேலியில் சிக்கிய நிலையில் இரண்டு கொம்பன் யானைகளின் சடலங்கள் இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இந்த கொம்பன் யானைகள் இரண்டும் நபரொருவரின் காணியிலேயே உயிரிழந்துள்ளதாக திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
‘வாசல’ என்று அழைக்கப்படுகின்ற கொம்பன் யானை இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும், ‘வலகம்பா’ என்று அழைக்கப்படுகின்ற மற்றைய கொம்பன் யானை ஒரு வாரத்துக்கு முன்பே உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
‘வாசல’ யானைக்கு 35 வயது இருக்கலாம் எனவும் ‘வலகம்பா’ யானைக்கு 40 வயது இருக்கலாம் என அதிகாரிகளால் கூறப்படுகிறது.
அதிக வலு கொண்ட மின்சார வேலியைப் பொருத்தியமையினாலேயே இக்கொம்பன் யானைகள் இரண்டும் உயிரிழந்துள்ளதாக திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இதன்போது காணி உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கருவலகஸ்வெவ பொலிஸார் மற்றும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த யானைகள் இரண்டுக்கும் நிக்கவெரெட்டிய மிருக வைத்தியர் டொக்டர் இசுருவினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.