இலங்கை அணிக்கு சொந்த மண்ணில் தொடர் சோதனை: மீண்டும் வெற்றி வாகை சூடிய இங்கிலாந்து
மகளிர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி மீண்டும் தோல்வியைத் தழுவி உள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 295 ஓட்டங்களை பெற்றது.
லாரன் வின்பீல்ட் (51), அணித்தலைவர் ஹெதர் நைட் (53), சீவர் (51) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
இலங்கை அணி தரப்பில், அமா காஞ்சனா, இனோக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இதன் பின்னர் 296 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய ஓட்டங்களை நோக்கி இலங்கை அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்கள் ஹாசினி பெரேரா (35), ஹன்சிகா (32) ஆகியோர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அதன் பின் வந்தவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 173 ஓட்டங்களே பெற்றது.
இதைத் தொடர்ந்து 122 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.