சீனிக்கான வரியை குறைத்தால் தேநீர், பாண், பணிஸ் உட்பட வெதுப்பக உணவு பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனிக்கான வரிச்சலுகை வழங்கினார்.
பொருளாதார பாதிப்புக்கு ஆட்சியில் இருந்த அனைவரும் களனி விகாரைக்கு சென்று மன்னிப்பு கோர வேண்டும் என போக்குவரத்து,ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ,முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ,பஷில் ராஜபக்ஷ ஆகியோர் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கவில்லை.
நிதியமைச்சின் அதிகாரிகள்,மத்திய வங்கியின் அதிகாரிகள் ஆகியோர் தான் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்கள்.
பொருளாதார பாதிப்புக்கு ஒரு தரப்பினர் மாத்திரம் பொறுப்புக் கூற வேண்டும்,மன்னிப்பு கோர வேண்டும் என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுகிறார்கள்.
பொருளாதார பாதிப்பை அரசியல் நோக்கத்துடன் ஆராய முடியாது. 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சியில் இருந்த அனைவரும் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும்.களனி விகாரைக்கு சென்று மன்னிப்பு கோர வேண்டும்.
ஒரு சில அரச அதிகாரிகள் வழங்கிய தவறான ஆலோசனைகளால் முழு அரசியல் கட்டமைப்பும் பாதிக்கப்பட்டது.முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜபக்ஷவிடம் ஒரு தரப்பினர் சீனிக்கான வரிச்சலுகை வழங்குமாறு கோரினார்கள்.
அவர் இவ்விடயம் தொடர்பில் துறைசார் நிபுணர்களிடம் வினவினார் அப்போது அவர்கள் ‘ சீனிக்கான வரிச்சலுகை வழங்கினால் தேநீர்,பாண்,பணிஸ்,உட்பட வெதுப்பக உணவுகளின் விலை குறைவடையும் ‘ என்றார்கள். இதன் பின்னர் கோட்டபய ராஜபக்ஷ வரிச்சலுகை வழங்கினார்.
பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடப்படும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி ஜயசுந்தர 12 ஆண்டுகள் திறைசேரியின் செயலாளராகவும், 12 ஆண்டுகள் மத்திய வங்கியின் நாணய சபை உறுப்பினராகவும் பதவி வகித்தார். ஆட்சிக்கு வரும் சகல தலைவர்களையும் இவர் வசியம் செய்து வசப்படுத்தியிருந்தார். அவரது ஆலோசனைக்கு அப்பாற்பட்டு எவராலும் செயற்பட முடியாத நிலையே காணப்பட்டது என்றார்.