1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து தான் இந்நாடு பல இனவாத மோதல்களுக்கு முகம் கொடுத்ததாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் இலாபம்
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் நோக்கத்திற்காகவும் பொருளாதார நோக்கத்திற்காகவும் இனவாதமும் மதவாதமும் சமூகத்தில் பரப்பப்பட்டன. இதனை அரசியல்வாதிகளும் தங்களின் அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்த நாடு வீழ்ந்த போது, அனைவரும் ஒன்றிணைந்து தான் இந்நாட்டை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பேச்சில் மட்டுமன்றி, செயற்பாட்டிலும் எமது ஐக்கியத்தை நாம் காண்பித்துள்ளோம்.
எதிர்காலம் குறித்து மட்டும் குறைகூறிக் கொண்டிருக்காமல், புதிதாக சிந்திக்கும் ஒரு சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும். 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்துதான், இந்நாடு பல இனவாத மோதல்களுக்கு முகம் கொடுத்தது.
நாட்டின் முன்னேற்றம்
இங்கு தான் நாம் பிரிந்தோம். இதன் பின்னர்தான் ஆயுதம் ஏந்தப்பட்டு, கொடிய யுத்தமும் நாட்டில் ஏற்பட்டது. இவை தான் நாடு முன்னேற்றமடைய தடையாக இருந்தன. 1956 இற்குப் பின்னர் நாட்டை விட்டு பல புத்திஜீவிகள் வெளியேறினர்.
1983இலும் 2022இலும் இதேபோன்று புத்திஜீவிகள் உள்ளிட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். நாம் நம்மை உணராத காரணத்தினால் தான், அடுத்தவரின் குறைகளை பெரிதாகக் காண்கிறோம்.
நாம் ஏனையவரின் மத, இன, கலாசாரத்தை மதித்தால் மட்டுமே, இந்நாட்டை முன்னேற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.