வடக்கில் 7ஆயிரம் மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி நடவடிக்கையை இடைநிறுத்தியுள்ளனர் என வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில் வடமாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் மனைப்பொருளியல் மற்றும் ஆடை வடிவமைப்பு கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் 7000 இற்கும் மேற்பட்டோர் உயர்தர பரீட்சையுடன் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர்.
அவ்வாறு உங்கள் கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தாது, சாதாரண தர சித்தி, உயர்தர சித்தி பெற்று பல்கலைக்கழகம் போக முடியாவிட்டாலும் அந்த கனவினை நீங்கள் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் ஊடாக பெற்று கொள்ளலாம்.
தேசிய தொழில் தகைமை சான்றிதழ் கற்கை நெறியை தொடர ரூபாய் 25000 வழங்கப்படும். இது குறித்த வடமாகாண பிரதம செயலகத்தின் இணையத்தளத்தினூடாக மேலதிக தரவுகளை பெற்று கொள்ளலாம்.
தேசிய தொழில் தகைமையினை அதன் நான்காம் தரத்துடன் (NVQ level – 4) நிறுத்திவிடாது அதன் ஏழாம் தரம் (NVQ level – 7) வரை செல்வதுடன் ஊடாக நீங்கள் பட்டம் ஒன்றினை பெற்று கொள்ளலாம் .
அவ்வாறு தேசிய தொழில் தகைமையின் 7 ஆம் தரத்தினை பெற்றால் நீங்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளை வகிக்கலாம்.
உண்மையிலேயே எத்தனையோ பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றார்கள் .அவர்களுக்கு கல்வி தகைமை இருக்கின்றது. ஆனால் தொழில் தகைமை இருப்பதில்லை.ஆனால் உங்களுக்கு இப்பொழுது உங்களுக்கு சான்றிதழுடன் தொழில் தகைமையும் உள்ளது என தெரிவித்தார்.