ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பூனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண 30ஆவது லீக் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தப் போட்டியில் குசல் பெரேராவுக்குப் பதிலாக ஆரம்ப வீரர் திமுத் கருணாரட்னவும் உபாதைக்குள்ளாகி நாடு திரும்பிய லஹிரு குமாரவுக்குப் பதிலாக துஷ்மன்த சமீரவும் இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 100ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதால் அவரைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு விசேட தொப்பி ஒன்று அணிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
மேலும் 6 துடுப்பாட்ட வீரர்கள் 20க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றபோதிலும் அவர்களில் பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம ஆகிய மூவர் மாத்திரமே 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
மொத்த எண்ணிக்கை 22 ஓட்டங்களாக இருந்தபோது திமுத் கருணாரட்ன (15) முதலாவதாக ஆட்டம் இழந்தார்.
பெத்தும் நிஸ்ஸன்கவும் அணித் தலைவர் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பெத்தும் நிஸ்ஸன்க 45 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து குசல் மெண்டிஸும் சதீர சமரவிக்ரமவும் 3ஆவது வீக்கெட்டில் ஜோடி சேர்ந்து அணியைக் கட்டி எழுப்ப முயற்சித்தனர்.
ஆனால், அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் குசல் மெண்டிஸ் அநாவசியமாக பந்தை உயர்த்தி அடித்து 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (134 – 3 விக்.)
மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 5 ஓட்டங்கள் சேர்ந்தபோது சதீர சமரவிக்ரம 36 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
அவரைத் தொடர்ந்து தனஞ்சய டி சில்வா (14), சரித் அசலன்க (22), துஷ்மன்த சமீர (1) ஆகியோர் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (185 – 7 விக்.)
இந் நிலையில் இலங்கை 200 ஓட்டங்களைக் கடக்குமா என்ற சந்தேகம் எழத்தொடங்கியது.
ஆனால், ஏஞ்சலோ மெத்யூஸ், மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் 8ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 45 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை கௌரவமான நிலையில் இட்டனர்.
மஹீஷ் தீக்ஷன 29 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 23 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவர் மாத்திரமே இலங்கை இன்னிங்ஸில் தலா ஒரு சிக்ஸை அடித்தனர்.
கசுன் ராஜித்த 5 ஓட்டங்களுடன் கடைசியாக ஆட்டம் இழந்ததுடன் டில்ஷான் மதுஷன்க ஓட்டம் பெறாமல் இருந்தார்.
பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 10 ஓவர்கள் வீசி 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முஜீப் உர் ரஹ்மானும் சிறப்பாக பந்துவீசி 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
242 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு ஆப்கானிஸ்தான் துடுப்பெடுத்தாடுகிறது.