சென்னை சேப்பாக்கம் எம். சிதம்பரம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் 26ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடிய தென் ஆபிரிக்கா ஒரு விக்கெட்டினால் மிகவும் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5இல் வெற்றியீட்டியுள்ள தென் ஆபிரிக்கா அரை இறுதியில் விளையாடுவதற்கான தனது வாய்ப்பை மேலும் அதிகரித்துக்கொண்டுள்ளது.
அதேவேளை, இம் முறை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நான்காவது தோல்வியைத் தழுவிய பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
பாகிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 271 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 47.2 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 271 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
தென் ஆபிரிக்காவின் முன்வரிசை மற்றம் மத்திய வரிசை வீரர்கள் அனைவரும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர்.
இதனால் தென் ஆபிரிக்காவின் வெற்றி வெகுதொலைவில் இருப்பது போல் தென்பட்டது.
ஏய்டன் மார்க்ராம் 3ஆவது விக்கெட்டில் ரெவி வென் டேர் டுசெனுடன் 54 ஓட்டங்களையும் டேவிட் மில்லருடன் 6ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களையும் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினார்.
ஆனால் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த ஏய்டன் மார்க்ராம், மொத்த எண்ணிக்கை 250 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தமை தென் ஆபிரிக்காவுக்கு பேரிடியாக அமைந்தது. (250 – 7 விக்)
மார்க்ராம் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 91 ஓட்டங்களைப் பெற்று தென் ஆபிரிக்காவுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
அவர் ஆட்டம் இழந்த பின்னர் வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 21 ஓட்டங்களைப் பெறுவதில் தென் ஆபிரிக்கா பெரும் சிரமத்தை எதிர்கொண்டது.
அத்துடன் 10 ஓட்டங்கள் இடைவெளியில் மேலும் 2 விக்கெட்களை தென் ஆபிரிக்கா இழந்ததால் மேலும் நெருக்கடியை எதிர்கொண்டது.
எனினும் கடைசி விக்கெட்டில் ஜோடி சேர்ந்த கேஷவ் மஹாராஜ், தப்ரெய்ஸ் ஷம்சி ஆகிய இருவரும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி தென் ஆபிரிக்காவுக்கு வெற்றி இலக்கை அடைய உதவினர்.
வெற்றிக்கான கடைசி 4 ஓட்டங்களை பவுண்டறி மூலம் பெற்றக்கொடுத்த கேஷவ் மஹாராஜ் 7 ஓட்டங்களுடனும் தப்ரெய்ஸ் ஷம்சி 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
துடுப்பாட்டத்தில் மார்க்ராமைவிட டேவிட் மில்லர் (29), டெம்பா பவுமா (28), குவின்டன் டி கொக் (24), ரெசி வென் டேர் டுசென் (21), மார்க்கோ ஜென்சென் (20) ஆகியோர் ஓரளவு திறமையை வெளிப்படுத்தினர்.
பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் உசாமா அலி 40 ஓட்டங்களுக்க 2 விக்கெட்களையும் மொஹமத் வசிம் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் குறைந்தது 300 ஓட்டங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் பெரிய எண்ணிக்கைகளைப் பெறத் தவறியதால் அந்த ஏதிர்பார்ப்பு ஈடேறவில்லை.
அத்துடன் இணைப்பாட்டங்களும் சிறப்பாக அமையவில்லை. 6ஆவது விக்கெட்டில் சவூத் ஷக்கீல், ஷதாப் கான் ஆகிய இருவரும் பகிர்ந்த 84 ஓட்டங்களே பாகிஸ்தான் இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
துடுப்பாட்டத்தில் சவூத் ஷக்கீல் (53), பாபர் அஸாம் (50), ஷதாப் கான் (43), மொஹமத் ரிஸ்வான் (31), மொஹமத் நவாஸ் (24), இப்திகார் அஹமத் (21) ஆகியோர் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் தப்ரெய்ஸ் ஷம்சி 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாக்கோ ஜென்சென் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கொயெட்ஸீ 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஏய்டன் மார்க்ராம்