கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவர்களுக்கு SJC87 அமைப்பை சேர்ந்த நன்கொடையாளர் திரு ரமணன் ராமச்சந்திரன் விளையாட்டு சீருடைகள் மற்றும் பாதணிகளை வழங்கியுள்ளார்.
குறித்த உதவி வழங்கும் நிகழ்வு இன்று கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் SJC87 அமைப்பை சேர்ந்த செல்வி சோபிகா கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
கடந்த சில மாதங்களின் முன்னர் SJC87 அமைப்பினர் தாயகம் திரும்பிய வேளை கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியிலும் பயனாளி மாணவர்களை சந்திக்கும் நிகழ்வை நடாத்தியிருந்தனர்.
இதன்போது கொடையாளர் ரமணன் ராமச்சந்திரன், விளையாட்டு மைதானத்தில் ஆர்வத்துடன் விளையாடிய மாணவர்களை நேரடியாக அவதானித்து அவர்களுடன் உரையாடியதன் அடிப்படையில் விளையாட்டு சீருடைகள் மற்றும் உபகரணங்களை வழங்க முன்வந்தார்.
ஒரு லட்சத்து அறுபத்து மூவாயிரம் ரூபா பெறுமதியான குறித்த உபகரணங்களை வழங்கும் நிகழ்வு கவிஞரும் ஆசிரியருமான தீபச்செல்வனின் நெறிப்படுத்தலில் இன்று இடம்பெற்றது.
இதன்போது, நிகழ்வுக்கு தலைமை தாங்கிய கல்லூரி முதல்வர் திருமதி சூரியகுமாரி இராசேந்திரம், கொடையாளர் ரமணன் ராமச்சந்திரனின் சகோதரர் பரதன் ராமச்சந்திரன் அண்மையில் மறைந்தமையையிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பரதன் ராமச்சந்திரனின் ஆத்மா சாந்தி பெற மௌன அஞ்சலி செலுத்தினர். அத்துடன் திரு ரமணன் ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு மாணவர்கள், ஆசிரியர்கள், சமூகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் பகிரப்பட்டது.
அத்துடன் SJC87 அமைப்பு குறித்த பாடசாலை மாணவர்களுக்கு நிதிஉதவி வழங்கி வருவதையும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கி வருவதையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். இதேவேளை இப் பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவான பல மாணவர்களுக்கு நிதி உதவியை SJC87 அமைப்பு வழங்கி வருவதும் இதன்போது குறிப்பிடப்பட்டது.