குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் தாராபூரைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளியை அம்மாநில தீவிரவாத தடுப்பு போலீஸார் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து குஜராத் ஏடிஎஸ் எஸ்பி ஓம் பிரகாஷ் கூறியதாவது: ஆனந்த் மாவட்டம் தாராபூர் நகரில் வசிக்கும் ஒருவர் இந்திய சிம் கார்டில் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களை அனுப்புவதாக இந்திய ராணுவ உளவுத் துறையிடமிருந்து எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. முக்கிய பிரமுகர்களின் செல்போன்களுக்கு மால்வேர்களை அனுப்பி தகவல்களை அவர் திருடி வந்துள்ளார்.
அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிம்கார்டு முகம்து சக்லைன் என்பவரது பெயரில் வாங்கப்பட்டு அஸ்கர் ஹாஜிபாயின் செல்போனில் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, பாகிஸ்தான் தூதரக தொடர்புடைய நபரின் அறிவுறுத்தலின் பேரில் தாராபூரில் ஆனந்த் என்ற இடத்தில் உள்ள லப்சங்கர் மகேஸ்வரியிடம் அந்த சிம் கார்டு ஒப்படைக்கப்பட் டுள்ளது.
லப்சங்கர் மகேஸ்வரி பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர். 1999-ல் இந்தியாவில் குடியேறி அதன் பின்னர் அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. இவரது குடும்பத்தினர் இன்னும் பாகிஸ்தானில் தான் வசித்து வருகின்றனர். இந்திய ராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களை குறிவைத்து அவர் உளவு தகவல்களை திரட்டியுள்ளார்.