இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தை கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது பயங்காரதவாதம் என்ற பெயரில் இனப் படுகொலைகளே அங்கு நடக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் யூதர்களுக்கு அவர்களின் நாட்டை கொடுக்க வேண்டும். அவர்கள் சமாதானமாக வாழ வேண்டும். அதேபோன்று பலஸ்தீனத்திற்கும் அநீதி ஏற்பட்டுள்ளது. அங்கே விட்டுக்கொடுப்பு ஏற்பட்டிருந்தது.
இந்த விட்டுக்கொடுப்பில் பலஸ்தீன மக்கள் அதிகமாக அதனை செய்ததை மறுக்க முடியாது. யூதர்களின் நாடு அந்த உடன்படிக்கைகளுக்கு இணங்கி நடந்திருக்க வேண்டும். அவர்களுக்கு சொந்தமான நாடு கிடைக்கும் போது, அந்த நாட்டை சரியான முறையில் நடத்தக் கூடிய முறையிலேயே அது அமைய வேண்டும்.
நாங்கள் பிழையை பிழையென்று நேர்மையாக கூற வேண்டும். அதற்கும் மேலாக சென்றுவிட்டது. பயங்கரவாதம் என்ற பெயரில் இனப் படுகொலைகளே நடக்கின்றன. மக்களின் உணவு, மருத்துவம், நீர் வசதிகள் மறுக்கப்படுவதன் நோக்கம் என்ன?
அந்த மக்கள் தொகையை அழிக்கும் செயற்பாடே நடக்கின்றன. அங்குள்ள மக்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். மக்களை குறிப்பிட்ட இடத்திற்கு புகலிடம் தேடி செல்லுமாறு கூறும் போது அவர்கள் அவ்வாறு செல்லும் போது அவர்கள் நோக்கி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
எவ்வாறாயினும் பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணங்கள் உள்ளன. அவற்றை கண்டறிய வேண்டும். எதிர்கால பலஸ்தீன நாட்டை அழிப்பதாகவே அமையும். 15 வருடங்களுக்கு முன்னர் இப்போது காஸாவில் நடப்பதை போன்று இலங்கையில் நடந்தது.
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப் பட்டதுடன் அவற்றின் மீது குண்டுகள் வீசப்பட்டன. வைத்தியசாலைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. அதேபோன்று 15 வருடங்களின் பின்னர் இப்போது நடக்கும் போது அதன் தவறுகளை புரிகின்றனர். இப்போது போர் நிறுத்தம் தொடர்பில் கதைக்கின்றனர். இது தொடர்பில் நாம் ஆச்சரியமடைகின்றோம்.
தமிழ் மக்கள் எந்த தரப்பினரை சேர்ந்தவர்களாக இருந்தாலும் நாங்கள் இஸ்ரேல் என்ற அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் சமாதானமாக வாழ வேண்டும்.
அதேபோன்றே இலங்கையிலும் சிங்கள மக்களும் சமாதானமாக இருக்க வேண்டும். இதனால் இந்த பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் மத்திய கிழக்கில் உள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து தமக்கென பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.