தயாரிப்பு : செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ
நடிகர்கள் : விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், ஜோர்ஜ் மரியான் உள்ளிட்ட பலர்.
இயக்கம் : லோகேஷ் கனகராஜ்
மதிப்பீடு : 3/5
‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய வசூலில் பாரிய வெற்றியை பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படைப்பு ‘லியோ’. பல தடைகளை கடந்து பட மாளிகைகளில் வெளியாகி இருக்கும் விஜயின் ‘லியோ’, அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா, இல்லையா என்பதை தொடர்ந்து காண்போம்.
ஆண்டனி தாஸ் (சஞ்சய் தத்) ஹரால்ட் தாஸ் (அர்ஜுன்) இருவரும் சகோதரர்கள். இவர்களில் ஆண்டனி தாஸுக்கு லியோ தாஸ் (விஜய்), எலீசா (மடோனா செபாஸ்டியன்) என இரண்டு வாரிசுகள்.
சகோதரர்கள் இருவரும் புகையிலை பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என்ற பெயரில் சட்ட விரோதமாக போதைப் பொருட்களை வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு தரை வழி மார்க்கமாக சட்ட விரோதமாக போதைப் பொருட்களை எடுத்துச் செல்வதில் லியோ தாஸும், எலீசாவும் உதவுகிறார்கள். சகோதரர்கள் இருவரும் தங்களது வியாபார விருத்திக்காக மூட நம்பிக்கை ஒன்றை கடைப்பிடிக்கிறார்கள். இதற்கு லியோ தாஸும், எலீசாவும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஒரு புள்ளியில் லியோ தாஸும், எலீசாவும் விபத்தில் இறந்துவிடுகிறார்கள்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு, வட இந்தியாவில் உள்ள இமாச்சல பிரதேசத்தில் பார்த்திபன் எனும் பெயரில் விஜய், தனது மனைவி சத்யா (திரிஷா) மகன் மற்றும் மகளுடன் வாழ்க்கை நடத்தி வருகிறார். அருகில் கோப்பி ஷொப் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த தருணத்தில் வட இந்தியாவுக்கு தென்னிந்தியாவிலிருந்து நடன இயக்குநர் சாண்டி, இயக்குநர் மிஷ்கின் தலைமையிலான ஒரு கும்பல் கொலை செய்துவிட்டு தப்பிக்கும் வழியில் பார்த்திபன் நடத்தும் கோப்பி ஷொப்புக்குள் நுழைகிறார்கள். அங்கு நடக்கும் வன்முறையான சூழலில் எதிர்பாராத விதமாக பார்த்திபன் இந்த கும்பலில் உள்ள அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார்.
இந்த சம்பவத்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து நீதிமன்றத்தில் பார்த்திபனை குற்றவாளி என சொல்ல, அதன்போது இது தற்காப்புக்காக நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் என்றும், பார்த்திபன் மிக அண்மையில் வழி தவறி வந்த அரிய வகை விலங்கான ஹைனா எனும் கழுதைப்புலி வகையை சேர்ந்த விலங்கை சமயோசிதமாக செயற்பட்டு காப்பாற்றிய விபரமும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின் நீதிமன்றம் பார்த்திபனை விடுதலை செய்கிறது.
ஆனால் பார்த்திபனால் கொல்லப்பட்ட கும்பலில் ஒருவன், பார்த்திபனையும் அவனது குடும்பத்தாரையும் கொல்ல முடிவு செய்கிறான். இதன்போது அவனது புகைப்படம் நாளிதழில் வெளியாகிறது. இதைப் பார்த்த ஹரால்டா தாஸ் மற்றும் ஆண்டனி தாஸ் கும்பலில் ஒருவன், ‘லியோ’ உயிரோடு இருப்பதாக தெரிவிக்கிறார்.
பார்த்திபனாக இருப்பது லியோவா, இல்லையா என்பதுதான் பரபர திரைக்கதை.
திரைப்படத்தில் பல நட்சத்திர நடிகர்கள் நடித்திருந்தாலும் ஒற்றை ஆளாக கதையை தோளில் சுமந்து ரசிகர்களை இறுதி வரை உற்சாகமாக வைத்திருக்கிறார் விஜய்.
விஜய் பார்த்திபனா, லியோவா என்ற குழப்பத்தை சுவராஸ்யமாக உச்சகட்ட காட்சி வரை விறுவிறுப்பாக அழைத்துச் செல்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
படத்தின் தொடக்கக் காட்சியில் பனிபடர்ந்த பிரதேசத்துக்குள் ஹைனா எனும் கழுதைப்புலி ஒன்று பாதை தவறி வருவதும், அதனை விலங்குகள் நல ஆர்வலரான விஜய் போராடி காப்பாற்றுவதும் அக்மார்க் மாஸ் ஹீரோக்கான காட்சி.
லியோவாகவும், திரிஷாவின் கணவராகவும், இரண்டு குழந்தைகளின் அப்பாவாகவும், பல இடங்களில் தன்னுடைய அனுபவமிக்க நடிப்பை வழங்கி மனதில் இடம் பிடிக்கிறார் விஜய்.
சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி, அனுராக் காஷ்யப்… என பல வில்லன்கள் இருந்தாலும் விஜய்க்கு ஏற்ற மாசான வில்லன் இல்லாததால் படத்தின் இரண்டாம் பாதி மற்றும் உச்சகட்ட காட்சி பிரம்மாண்டமாகவும், அடர்த்தியாகவும் இல்லாமல் எளிதாக கடந்து செல்கிறது.
விஜயை தவிர்த்து திரிஷா, ஜோர்ஜ் மரியான், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் அதிக காட்சிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.
பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம், படத்தொகுப்பு என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் கடின உழைப்பை வழங்கி ரசிகர்களை மகிழ்விக்கிறார்கள்.
சண்டைக் காட்சிகளில் குறிப்பாக, அர்ஜுனுக்கும் விஜய்க்கும் நடக்கும் உச்சகட்ட சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது. சண்டை பயிற்சி இயக்குநர்கள் அன்பறீவ் தங்களது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
இந்த திரைப்படத்தின் கதை 2006ஆம் ஆண்டில் வெளியான ‘ஏ ஹிஸ்டரி ஒஃப் வயலென்ஸ்’ எனும் படத்தினை தழுவி தயாராகி இருக்கிறது என்று தொடக்கத்திலேயே இயக்குநர் தெரிவித்திருந்தாலும்… படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும், விஜய் என்ற கவர்ச்சிக் காந்தம் அனைத்தையும் மறக்கடிக்கிறது.
இந்த திரைப்படத்தில் விஜய் புகை பிடிக்கிறார், மது அருந்துகிறார், கெட்ட வார்த்தை பேசுகிறார்… இருந்தாலும் குடும்பம்தான் முக்கியம்; குடும்பத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லலாம் என தன்னுடைய கதாபாத்திரத்தின் ஊடாக உணர்த்துகிறார்.
லியோ : விஜய் – லோகேஷ் கூட்டணியின் மாயாஜாலம்.