புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது 2009ம் ஆண்டு இஸ்ரேலால் வழங்கப்பட்ட விமானங்கள் குண்டுகளை வீசியபோது நேர்ந்த வலி 14 வருடங்களின் பின்னர் காயத்தை கொடுத்துக்கொண்டிருக்கின்றது என மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்
தனது டுவிட்டர்பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
. கடந்த ஒருவாரமாக நடக்கும் போர் தூக்கத்தை கலைத்துக்கொண்டே இருந்தது. தூங்கச் செல்லும்முன்னர் ஒருமுறை செய்தியை கவனித்த போதுதான் மருர்துவமனையின் மீதான தாக்குதல் செய்தி வந்துகொண்டிருந்தது. குழந்தைகள், மருத்துவர்கள், செவிலியர்கள் ரத்த சகதிகளை காண முடிவதில்லை. நமக்கு நேரும் அடக்குமுறையை எதிர்கொள்ளலாம், ஆனால் அடுத்தவர்களுக்கு நேரும் அடக்குமுறை துயரங்களை சுமக்க இயலவில்லை. 2009ம் வருடத்திய தூக்கமற்ற இரவுகள் மீண்டும் வேட்டையாடுகின்றன. புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் மீதான இதே இசுரேலால் கொடுக்கப்பட்ட விமான ஆயுதங்கள் வீசப்பட்டபோது நேரும் அதே வலி மீண்டும் 14 வருடம் கழித்து காயத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இன்று மாலை இந்திய தவ்ஹீத் ஜமாத் சென்னை அண்ணாசாலை தர்கா (தாராப்பூர் டவர்) அருகே போராட்டத்தை மாலை 4 மணிக்கு அறிவித்திருக்கிறார்கள். 2009ல் ஓடி ஓடி அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. 2009ல் நாம் இயக்கமாக, அரசியலாக ஒன்றாக எழாமல் தோற்றுப்போனோம், இப்போதும் தோற்கிறோம். குறைவான மக்கள் தொகை கொண்ட நகரத்தில் கூட உலகெங்கும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரள்கிறார்கள், கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட நாம் நூற்றுக்கணக்கில் கூட திரள முடியாதவர்களாகி இருக்கிறோம். அரசியல் கட்சி, சாதி என பிளவுண்டு கிடக்கும் சமூகம், நீதியை நிலைநாட்ட என்றுமே பயன்படாது என்பதற்கு நாமே சாட்சி. இன்று மாலை நான் போராட்டத்தில் பங்கெடுக்கிறேன், மருத்துவமனையில் கையில் பிஸ்கட்டோடு கொல்லப்பட்ட அந்த குழந்தைக்காக..
பாப்டிஸ்ட் கிருத்துவ மருத்துவமனை மீது இசுரேல் நடத்திய விமான தாக்குதலில் 500க்கும் அதிகமான பாலஸ்தீன குழந்தைகள், மருத்துவர்கள் படுகொலை. பச்சைப்படுகொலை செய்யும் இசுரேலுக்கு எதிராக உங்கள் குரல் எழட்டும்
பாலஸ்தீனத்தின் பாப்ட்டிஸ்ட் மருத்துவமனை மீது சற்று முன் குண்டுவீசியது இசுரேல். நோயாளிகள், மருத்துவர்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை. அப்பட்டமாக போர்க்குற்றம் புரிந்து இனப்படுகொலை செய்கிறது இசுரேல்.
புதுகுடியிருப்பு, வட்டுவாகல் என ஈழ மக்களின் மருத்துவமனைகள் மீது குண்டுவீசி நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களை அழித்த இலங்கையின் அதே போர்வெறியை கடைபிடிக்கும் இசுரேல்.
இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட இனம் நாம். சக ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்போம்.