உலகளவில் ஏனைய புற்றுநோய் பாதிப்பை போல தற்போது தைரொய்ட் எனும் உறுப்பில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் தைரொய்ட் புற்றுநோய் பாதிப்பை சீராக்குவதற்கு முழுமையான விழிப்புணர்வை மக்கள் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
தைரொய்ட் சுரப்பி என்பது எம்முடைய உடம்பில் உள்ள முக்கியமான நாளமில்லா சுரப்பி. இந்த சுரப்பிகளில் பல்வேறு காரணங்களால் புற்றுநோய் கட்டிகள் ஏற்படக்கூடும். இந்த தைரொய்ட் சுரப்பியில் முடிச்சு முடிச்சாக ஏற்படும் தீங்கற்ற கட்டிகள் மற்றும் புற்று நோயாக மாறும் கட்டிகள் என இரண்டு வகையான கட்டிகள் ஏற்படுகிறது.
நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் இத்தகைய கட்டிகளால் மூச்சு திணறல் ஏற்படக்கூடும். மேலும் உணவு விழுங்குவதில் பாரிய பின்னடைவு ஏற்படும். தொடக்க நிலையில் இதனை கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் நாளடைவில் அது புற்று நோயாக மாறும். மேலும் தைரொய்ட் சுரப்பியில் தோன்றும் புற்றுநோய் கட்டிகள் நான்கு வகையாக உரு மாறி அவை வேறு உறுப்புகளுக்கு பரவக்கூடும்.
மருத்துவர்கள் இதனை TFNS ( Thyroid Find Needle Aspiration) என்ற ஊசி பரிசோதனையில் மூலமாக இதனை கண்டறிந்து, எங்கு பரவி இருக்கிறது? என்பதனை துல்லியமாக அவதானித்து, தைரொய்ட் எனும் சுரப்பியை முழுவதுமாக சத்திர சிகிச்சை மூலம் அகற்றி, முழுமையான நிவாரணத்தை வழங்குவர். இந்த சத்திர சிகிச்சைக்குப் பிறகு ஆயுள் முழுவதும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும்.
அதே தருணத்தில் தைரொய்ட் சுரப்பியில் ஏற்பட்டிருக்கும் புற்றுநோய் வேறு உறுப்புகளுக்கு பரவி இருந்தால் அதனை Radioactive Liquid Therapy என்ற சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்கி வேறு உறுப்புகளை பாதிக்காமல் பாதுகாக்கலாம்.
டொக்டர் ராஜ்குமார்
தொகுப்பு அனுஷா.