அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையே விளையாட்டுத்துறை ஒத்துழைப்புக்கான புதுப்பிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார உதவி அமைச்சர் டிம் வொட்ஸ் பா.உ., இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) கைச்சாத்திட்டனர்.
புதுப்பிக்கப்பட்ட இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் நீண்ட காலமாக அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையே விளையாட்டுத்துறையில் நிலவிவரும் உறவுகளை மேலும் பலப்படுத்தும். பயிற்றுநர் கல்வி, பயிற்சி, விளையாட்டுத்துறை விஞ்ஞானமும் மருத்துவமும், விளையாட்டுத் துறையில் பாலின சமத்துவம், ஊழல் தடுப்பு மற்றும் போதைவஸ்து பாவனை நடைமுறைகள் என்பன உள்ளிட்ட விடயங்களில் இந்த ஒப்பந்தம் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், உதவி அமைச்சர் வாட்ஸ், இலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் பகிர்ந்துகொள்ளும் விளையாட்டு வரலாற்றைப் பற்றி பிரதிபலித்ததுடன், இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய பெண்கள் மற்றும் ஆண்கள் அணி உறுப்பினர்களுடன் தனது கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்தினார். இலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் பிரதிநிதிகளுடன் இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் விளையாட்டு வரலாற்றை பற்றியும் அவர் பிரதிபலித்தார்.
டிம் வொட்ஸ் பா.உ. கருத்துரை :
“விளையாட்டு நாம் பகிர்ந்துகொள்ளும் ஒரு பேரார்வமாகும். அது எம்மை ஒருங்கிணைக்கிறது. கிரிக்கெட் களத்தில் சிநேகபூர்வமாக, ஆனால், மிகவும் கடுமையாக இடம்பெறும் போட்டி இதனைப் பிரதிபலிக்கிறது. அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையே விளையாட்டுத்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.”
ரொஷான் ரணசிங்க பா.உ. கருத்துரை :
“விளையாட்டில் எமக்கிடையேயான போட்டித்தன்மை எதுவாயிருப்பினும், இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் உள்ள திறமையாளர்களை இனங்காண்பதற்கும் பயிற்றுவிப்பதற்கும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழான ஒத்துழைப்பினை நாம் எதிர்பார்க்கின்றோம். இது எமது விளையாட்டு வீரர்களின் உச்சத் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும் அவர்களை உலக அரங்கில் வெளிப்படுத்துவதற்கும் நாம் இணைந்து பணியாற்றுவதற்கான சட்டகத்தை வழங்கும்.”