காங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் வட பகுதியில் கடந்த 3-ம் தேதி இரவு மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்தது. இதனால் தீஸ்தா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த திடீர் வெள்ளப் பெருக்கால் சிக்கிம் மாநிலத்தில் 22,034 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 2,011 பேர் மீட்கப்பட்டதாக சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
திடீர் வெள்ளத்தில் ராணுவ முகாமும் சேதமடைந்ததால், அங்கிருந்த 22 வீரர்கள் உட்பட 102 பேரை காணவில்லை. இவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 4 மாவட்டங்களில் 26 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆயிரக்கணக்கானோர் தங்கியுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிங்தாம் பகுதியை சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
தீஸ்தா நதி வெள்ளத்தால் சிக்கிம் மாநிலத்தில் 11 பாலங்கள் சேதமடைந்தன. மங்கன் மாவட்டத்தில் மட்டும் 8 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. 4 மாவட்டங்களில் மொத்தம் 277 வீடுகள் சேதமடைந்துள்ளன. சங்தங் மற்றும் மங்கன் ஆகிய பகுதிகளில் எல்லைகள் ரோடு அமைப்பினர் (பிஆர்ஓ) மீட்பு பணியில் உதவி வருகின்றனர்.