இந்தியா குஜராத் மாநிலத்திலுள்ள ஷாதின் பரோடா பகுதியிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு நுவரெலியாவுக்கு வருகை தந்திருந்த 88 பேர் கொண்ட குழுவில் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இந்தியா குஜராத் மாநிலத்திலுள்ள ஷாதின் பரோடா பகுதியை சேர்ந்த ஷான் விஜயகுமார் ஜம்பக்லால் (வயது 67) என்பவரே என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
குறித்த நபரும் அவரது மனைவி ஷான் ஜேத்தனா விஜயகுமாரும் 88 பேர் அடங்கிய குழுவாக கடந்த செப்டெம்பர் 25ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு கொழும்புக்கு வந்துள்ளனர்.
இவ்வாறு வருகை தந்தவர்கள் கொழும்பில் பல இடங்களுக்கு சென்று சுற்றுலா விஜயத்தை மேற்கொண்ட பின் கண்டிக்கு வருகை தந்தவர்கள், பின்னர் கடந்த 29ஆம் திகதி நுவரெலியாவுக்கு வருகை தந்து அரலிய சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது ஷான் விஜயகுமார் ஜம்பக்லாலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதணைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் மாரடைப்பினால் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் உயிரிழந்த ஷான் விஜயகுமார் ஜம்பக்லாலின் உடல் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என அவரின் மனைவி விடுத்த கோரிக்கைக்கு அமைய, உயிரிழந்தவரின் உடலை அவரின் மனைவியிடம் நேற்று சனிக்கிழமை (30) ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.