தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்திருக்கும் நீதிபதி சரவணராஜா ‘உயிரச்சுறுத்தலை’ அதற்குக் காரணமாகக் குறிப்பிட்டிருக்கும் நிலையில், விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடையதாக இருக்கக்கூடுமென சந்தேகிக்கப்படும் எச்சங்கள் அடங்கிய மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை மேற்பார்வை செய்யும் மேலதிக நீதிவானின் பாதுகாப்பு குறித்து மிகுந்த கரிசனைகொள்வதாக இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி மக்களுக்கு நீதியை வழங்குவதற்காக அரசினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள் குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினரின் எவ்வித தலையீடுகளுமின்றி நேர்மையாகவும், சுயாதீனமாகவும் செயற்படுவதை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அச்சங்கம், இவ்விவகாரம் தொடர்பில் விரைவானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டு நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்குத் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்திருப்பதுடன், நாட்டைவிட்டும் வெளியேறியுள்ளமை கடும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் தோற்றுவித்திருக்கும் நிலையில், இதுகுறித்து இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
குருந்தூர் மலை விவகாரம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடைய இருக்கக்கூடுமென சந்தேகிக்கப்படும் எச்சங்கள் அடங்கிய மனிதப்புதைகுழி விவகாரம் என்பவற்றின் காரணமாக முல்லைத்தீவு நீதிபதியின் அதிகார வரம்பெல்லைக்கு உட்பட்ட பகுதி நீதி, சட்ட மற்றும் அரசியல் ரீதியில் சர்ச்சைக்குரிய ஆடுகளமாக மாறியிருந்தது. நீதிபதி சரவணராஜாவை ‘தமிழ்’ நீதிபதியாகவும், ‘சிங்கள பௌத்த’ நாட்டுக்குள் அவர் உத்தரவுகளை வழங்கிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவினால் முல்லைத்தீவு நீதிபதியின் அலுவலகம் நேரடி அச்சுறுத்தலுக்கு உள்ளானது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தரணிகள் கூட்டிணைவு ஆகியவற்றின் கண்டன அறிக்கைகள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தினால் வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப்போராட்டம் ஆகியவற்றின் பின்னரும் நீதிபதி அவரது நீதித்துறைசார் கடமையை சுதந்திரமாகச் செய்வதற்கு எதிரான அழுத்தங்கள் தொடர்ந்திருக்கின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவினால் கையெழுத்திடப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இராஜினாமா கடிதம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. அதில் உயிரச்சுறுத்தல் மற்றும் மிகையான அழுத்தத்தின் விளைவாக தனது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்வதாக நீதிபதி சரவணராஜா குறிப்பிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து குருந்தூர் மலை விவகாரத்தில் அவர் வழங்கிய தீர்ப்புக்காக அவரை அச்சுறுத்தியமை, அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தமை, ‘நீதிபதி’ என்ற ரீதியில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பைக் குறைத்தமை மற்றும் அவரது உத்தரவுகளை மாற்றுமாறு அழுத்தம் பிரயோகித்தமை என்பன தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரைக் குற்றஞ்சாட்டும் வகையிலான செய்திகள் ‘வட்சப்’இல் பகிரப்பட்டன.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மையெனில், அவை சுயாதீன நீதிமன்ற செயன்முறையில் நிறைவேற்றதிகாரத்தின் தலையீடு குறித்த தீவிர கரிசனையைத் தோற்றுவிக்கின்றன. அதிலும் இங்கு நீதி அதிகார வரம்பெல்லையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் அக்கரிசனை மேலும் வலுப்பெறுகின்றது. ஏனெனில் நாட்டில் வட, கிழக்கு பகுதிகளிலுள்ள நீதிபதிகள், அப்பகுதிகளைப் பாதிக்கும் அரசியல்சார் நெருக்கடிகளுக்கு மேலதிகமாக சிறுபான்மையினரைப் பாதிக்கும் நுண்ணுணர்வுமிக்க இனவாத நெருக்கடிகளையும் கையாளவேண்டியுள்ளது.
அதேவேளை முல்லைத்தீவில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழியானது இன்னமும் அகழ்வுப்பணிகள் இடம்பெறும் நிலையிலேயே இருக்கின்றது என்பதைக் கரிசனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம். இராஜினாமா செய்திருக்கும் நீதிபதி ‘உயிரச்சுறுத்தலை’ அதற்குக் காரணமாகக் குறிப்பிட்டிருக்கும் நிலையில், விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடையதாக இருக்கக்கூடுமென சந்தேகிக்கப்படும் எச்சங்கள் அடங்கிய மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை மேற்பார்வை செய்யும் மேலதிக நீதிவானின் பாதுகாப்பு குறித்து நாம் கரிசனை கொள்கின்றோம்.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கம் மற்றும் சட்டமா அதிபருக்கு எதிராக ஊடகங்களில் பகிரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிச்சேவைகள் ஆணைக்குழு பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டுமென்று வலியுறுத்துகின்றோம்.
பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவதற்கும், காணாமல்போவதற்கும் காரணமாக இருந்த யுத்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டமும், அதன் மக்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனர். காணாமல்போனோரின் குடும்பத்தினர் இன்னமும் உண்மை மற்றும் நீதிக்காகக் காத்திருக்கின்றனர். தமிழ் விவசாயிகள் அவர்களது நிலங்கள் விடுவிக்கப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர். யுத்தம் மற்றும் இனமோதல்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பொறுத்தமட்டில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன இன்னமும் அடையப்படமுடியாத தொலைவிலேயே இருக்கின்றன. ஆகையினால் மக்களுக்கு நீதியை வழங்குவதற்காக அரசினால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள் குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினரின் எவ்வித தலையீடுகளுமின்றி நேர்மையாகவும், சுயாதீனமாகவும் செயற்படுவதை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு சட்டத்துறை சார்ந்தவர்கள் என்ற ரீதியில் எமக்குண்டு. எனவே இவ்விவகாரம் தொடர்பில் விரைந்து செயற்படுமாறும், சட்டத்துறையினர் மற்றும் அக்கறையுடைய சமூகத்தினருக்கு இதுபற்றிய உண்மையை வெளிப்படுத்துமாறும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.