இலங்கை அரசு போர் வெறியை தூண்டும் நினைவு சின்னங்களை அமைத்தது போல தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தமது 30 ஆண்டுகால ஆட்சியில் ஒருபோதும் நிறுவவில்லை என தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைவரும் ஈழக் கவிஞருமான தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைக்கப்பட உள்ள போர் ஞாபகச் சின்னம் தொடர்பாக கருத்தறியும் வகையில் அதிபர் ரணில் அமைத்த செயலணி முன்பாக கிளிநொச்சியில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், “கொழும்பில் அமைக்கப்பட உள்ள போர் ஞாபகச் சின்னம் போர் வெறியை தூண்டுவதாகவும் ஈழத் தமிழர்கள் மீதான அடக்கு முறையை தூண்டுவதாகவும் அமைந்துவிடும் என்கின்ற அச்சமும் சந்தேகமும் ஈழத்தமிழ் மக்களுக்கு உண்டு.
போர் வெற்றி சின்னம்
ஏனென்றால் இந்த அமர்வு நடைபெறும் இந்த இடத்திற்கு அருகில் தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த காலத்தில் சிறுவர்களுக்கான பூங்கா ஒன்றை உருவாக்கிய இடத்தில் இப்போது தமிழர்களின் இதயத்தை கிழிக்கின்ற துப்பாக்கி ரவையை கொண்ட போர் வெற்றி சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் தாயகப் பகுதியில் இவ்வாறு போர் வெறியை தூண்டும் இராணுவத்தின் போர் வெறிச் சின்னங்களை அமைத்துக் கொண்டு கொழும்பில் கொல்லப்பட்ட மக்களுக்காக சின்னம் அமைக்கவும் என்பது யாரை ஏமாற்றுவதற்கான வித்தை? முதலில் இங்கு உள்ள போர் வெறிச் சின்னங்களை அகற்றி அவற்றை இங்கு கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தலிடங்களாக ஆக்கப்பட வேண்டும்.
அதைவிட தமிழீழ விடுதலைப் புலிகள் தமது 30 ஆண்டு கால நில ஆட்சியில் ஒருபோதும் போர்வெறியை தூண்டும் நினைவுச் சின்னங்களை அமைத்தது கிடையாது.
ஒடுக்கு முறைக்கு எதிரான போரில் மாண்டு போன மாவீரர்களின் நினைவு சின்னங்களையே உருவாக்கினார்கள். அப்படியான ஒரு ஒடுக்குமுறையின் சின்னமாகவே மாவீரர் துயலும் இல்லங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மாவீரர் துயிலுமில்லங்கள்
இலங்கையில் என்ன நடந்தது என்பதையும் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தின் நியாயங்களையும் சிங்கள மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரே இடமாக மாவீரர் துயிலுமில்லங்களே காணப்படுகின்றன.
அவற்றை மக்களிடம் மீள கையளித்து அங்கு சுதந்திரமான நினைவேந்தலை மேற்கொள்ள இடமளிப்பதே போதுமானது.
கொழும்பில் பாரிய போர் நினைவுத்தூவிகளை அமைப்பதை விடவும் வடகிழக்கின் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள நிர்மாணிப்பதே போரின் கதைகளை அறிந்து கொள்ள போதுமானது என்று அவர் மேலும் கூறினார்.