திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் ஊர்தி பவனி வருகிறது.இந்த சம்பவத்தின் ஊடாக தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றம் பெறும் நிலை காணப்படுகிறது.
ஆகவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
திலீபனின் நினைவேந்தல் தற்போது அனுஸ்டிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக திலீபன் இருந்தாலும் அவர் அஹிம்சை வழியில் போராடி இறுதியில் உயிர் தியாகம் செய்தார்.
திலீபனின் நினைவேந்தல் தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. திலீபனின் உருவப்படத்தை சுமந்த வண்ணம் ஊர்தி பவனி மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் செல்லும் போது தம்பலகாமம் பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிங்களவர்கள் தம்பலகாமம் பகுதியில் வாழ்கிறார்கள்.
சிங்களவர்கள் அதிகளவில் வாழும் பகுதிக்கு செல்லாமல் இந்த ஊர்தி பேரணி திருகோணமலைக்கு சென்றிருக்கலாம். ஆனால் அவ்வாறு செல்லாமல் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் சிங்களவர்களின் கோபத்தை தூண்டி விடும் வகையில் இந்த பவனி சென்றுள்ளது.
நான் சிங்களவர்களுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் உரையாற்றவில்லை. திலீபனின் நினைவு ஊர்தி பவனிக்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. இந்த பவனியால் தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் நிலை காணப்படுகிறது.
அனுமதி பெறாத ஒரு பவனிக்கு பொலிஸார் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள் என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது. ஆகவே இந்த பிரச்சினைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காண வேண்டும். திலீபனின் நினைவேந்தல் பவனி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவிக்க வேண்டும்.
இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை அறிவிக்குமாறு வலியுறுத்துகிறேன் என்றார்.