விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில், அதுகுறித்த முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளுக்காக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு வியாழக்கிழமை (14) இலங்கை வருகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் சுமார் 3 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்குக் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்தது.
அக்கடனுதவியின் நிமித்தம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் உரியவாறு நிறைவேற்றியிருக்கின்றதா எனக் கண்காணிக்கும் முதலாம் கட்ட மதிப்பீடு இவ்வாரம் நடைபெறவுள்ளது.
அதனை முன்னிட்டு வியாழக்கிழமை (14) இலங்கைக்கு வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, இம்மாதம் 27 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுக்கவுள்ளனர்.
இம்மதிப்பீடானது கடந்த ஜுன் மாதம் வரையான பொருளியல் தரவுகளை அடிப்படையாகக்கொண்டே மேற்கொள்ளப்படவுள்ளது.
இம்மதிப்பீட்டு செயன்முறை தொடர்பில் ஏற்கனவே கருத்து வெளியிட்டிருந்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ‘சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவானது முதலாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகளுக்காக இலங்கைக்கு வருகைதருகின்றதே தவிர, நாம் ஏற்றுக்கொண்ட நிபந்தனைகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றுவதற்கான கால எல்லை முடிவடைந்துவிட்டதாக இதனை அர்த்தப்படுத்தமுடியாது.
இம்மதிப்பீட்டின் பின்னர், நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு எமக்கு மேலும் சில மாதங்கள் கால அவகாசம் உண்டு’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டுக்கு வருகைதரும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளுடனும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.