கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இருப்பு நாளான (Reserve Day) இன்றைய தினம் நடைபெற்றுவரும் இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டி மழையினால் தடைப்பட்டுள்ளது.
இந்தியாவினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான 357 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் 11 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது இரவு 8.08 மணியளவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.
இந்தப் போட்டியில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் அணி குறைந்தபட்சம் 20 ஓவர்களைப் பூர்த்திசெய்தால் மாத்திரமே முடிவு கிட்டும். எனவே மழை விட்டு ஆட்டம் மீண்டும் தொடர்ந்தால் இந்தியா 9 ஓவர்களை விரைவாக வீசி முடிக்க முயற்சிக்க வேண்டும். மேலும் டக்வேர்த் லூயிஸ் முறைமை பிரகாரம் 20 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 200 ஓட்டங்களாகும்.
தற்போது 11 ஓவர்களில் 44 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ள பாகிஸ்தான் எஞ்சிய 9 ஓவர்களில் 156 ஓட்டங்களைப் பெறும் என்பதை நினைத்துப்பார்க்க முடியாது.
ஒருவேளை போட்டி முழுமையாக கைவிடப்பட்டால் இந்தியாவின் அதிரடி வீண்போய்விடும். ஏனெனில் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 356 ஓட்டங்களைக் குவித்தது.
விராத் கொஹ்லி ஆட்டம் இழக்காமல் 122 ஓட்டங்களையும் கே. எல். ராகுல் ஆட்டம் இழக்காமல் 111 ஓட்டங்களையும் ஷுப்மான் கில் 58 ஓட்டங்களையும் ரோஹித் ஷர்மா 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆட்டம் தொடர்ந்தால் பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 20 ஓவர்களில் 200 ஓட்டங்கள், 25 ஓவர்களில் 237 ஓட்டங்கள், 30 ஓவர்களில் 267 ஓட்டங்களாக அமையும்.
இரவு 11.15 மணிக்கு முன்னர் ஆட்டத்தை தொடர முடியாமல் போனால் ஆட்டம் கைவிடப்படும்.