மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
மின்சார சபையின் 24 ஆயிரம் ஊழியர்கள் கட்டமைப்பை நிச்சயம் முகாமைத்துவம் செய்ய வேண்டும் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் யூ.கே.சுமித் உடுகும்புர வாய்மூல விடைக்கான வினாக்களின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டில் மின்சார உற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.
உக்ரைன்-ரஷ்யா போர், கொவிட் பெருந்தொற்று தாக்கம் ஆகிய பூகோள காரணிகளால் எரிபொருள்,நிலக்கரி ஆகிய மூலப்பொருட்களின் விலை சடுதியாக உயர்வடைந்தன.
வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் எரிபொருள் கொள்வனவு கேள்விக்குள்ளாக்கப்பட்டது. இதனால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டது.
மறுபுறம் 09 வருட காலமாக நடைமுறைக்கு சாத்தியமான வகையில் மின்சார கட்டணம் திருத்தம் செய்யப்படாத காரணத்தால் தேசிய மட்டத்தில் மின்னுற்பத்தி மற்றும் விநியோகம் ஆகிய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நுரைச்சோலை அனல் மின்நிலையம் அமைக்கப்பட்ட போது சம்பூர் அனல் மின்நிலையத்தை உருவாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பல்வேறு காரணிகளினால் சம்பூர் அனல் மின்நிலைய பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.
நாட்டில் இரண்டு அனல் மின்நிலையங்கள் தேவையா? என மின்சார சபை தொழிற்சங்கத்தினர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சூரிய சக்தி மின்னுற்பத்தி திட்டங்களை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மின்சார சபையை நிச்சயம் மறுசீரமைக்க வேண்டும். மறுசீரமைப்பதற்கான சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். அதை தொடர்ந்து அடுத்தமாதம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.
மின்சார சபையின் 24 ஆயிரம் ஊழியர்கள் கட்டமைப்பை நிச்சயம் முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்றார்.